தமிழ்நாடு

tamil nadu

குடியரசு தலைவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க இயலாது - தமிழக முதலமைச்சர் - ஆளுநர் பேசி தீர்வு காண்க - உச்ச நீதிமன்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:11 PM IST

குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பிய மசோதாக்களை சட்டவிரோதமானது என ரத்து செய்ய முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், ஆளுநரும் கூடி பேசி தீர்வு காண வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தியது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி :தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அரசுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி பல மாதங்கள் ஆகியும், தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து நவம்பர் 18ஆம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழக ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்தது.

இது தொடர்பாக ஆளுநர் பதிலளிக்கக் கோரியது. இதையடுத்து தமிழ்நாடு அரசு அனுப்பிய 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், 5 மசோதாக்கள் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று உள்ளதாகவும், 10 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் மற்றும் 5 மசோதாக்கள் அக்டோபர் 2023ஆம் ஆண்டுதான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலுவையிலுள்ள மசோதாக்கள் குறித்து முடிவுகள் எடுக்க கால அவகாசம் தேவை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மசோதாக்களை 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய பின்னர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை ஆளுநர் முடக்கி வைக்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்மையில் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் திருத்த மனுவை தாக்கல் செய்தது. அதில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியது.

அரசியலமைப்பு சட்டத்தின் படி மசோதாக்களையும், அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தன்னிச்சையானது, நியாயமற்றது என்று அறிவிக்க வேண்டும் என்றும் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இன்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாக்களை சட்டவிரோதமானது என ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், ஆளுநரும் கூடி பேசி தீர்வு காண வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர். மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க :நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து - சபநாயகர் ஓம் பிர்லா!

ABOUT THE AUTHOR

...view details