தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் கரோனா தொற்று அதிகரிப்பு.. முககவசம் அணிய அறிவுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 1:11 PM IST

Corona Infection: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டு இலக்கத்தில் உள்ளதால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து கொள்வது நல்லது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advise to wear face mask again due to increasing corona infection
கரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

சென்னை:சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் மற்றும் தினசரி நாளிதழ்களில் பணிபுரிபவர்களுக்கான மருத்துவ முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (டிச.21) துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

இது அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து செய்யப்படுகிறது. மருத்துவ முகாமில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்த பதிவேடும் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டது. மிக கனமழை பொழிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மழைப்பொழிவு தொடங்கியவுடன், பெரிய அளவில் நீர் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்து வருகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். தூத்துக்குடி மருத்துவமனை தாழ்வான பகுதியில் இருந்ததால், உடனடியாக அதற்குள் நீர் வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மின்சார துண்டிப்பும் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்தனர். எனவே, அந்த சூழ்நிலையைs சமாளிப்பதற்காக மருத்துவக்கல்வி இயக்குனரை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தோம். பின்னர், டீசல் மூலம் ஜெனரேட்டர் இயக்கி, மின்சார வசதி கொடுக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கிய உடன், நீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு, அங்குள்ள நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டது.

நாளை நான் தூத்துக்குடிக்குச் செல்ல இருக்கிறேன். கடந்த 17ஆம் தேதி முதல் நேற்று வரை 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர், உதவியாளர் என நான்கு பணியாளர்கள் அந்த வாகனத்தில் சென்று, முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 1,479 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதில் 28 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 340 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. 570 பேர் இருமலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். தொற்று நோய் வராமல் தடுக்கும் முயற்சியை மருத்துவத்துறை செய்து வருகிறது.

மருத்துவ முகாம்களை மேலும் அதிகரித்து, இயல்புநிலை வரும் வரையில் நோய் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் பணியாற்ற உள்ளேன். கரோனா தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, தொடர்ச்சியாக பரவி வருகிறது. கடந்த 7 மாதங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா தொற்று பாதிப்பு, தற்போது இரு இலக்கங்களில் (20, 22 என்ற அளவில்) வந்து கொண்டிருக்கிறது.

மேலும், இந்த பாதிப்பு சிங்கப்பூரில்3 ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. மூன்று நாட்கள் காய்ச்சல் பாதிப்பு, இருமல், சளி போன்ற மிதமான பாதிப்புகள்தான் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்கெல்லாம் காய்ச்சல் அதிகமாக இருக்கிறதோ, அங்குள்ள மாதிரிகளை எடுத்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து, கரோனா பாதிப்பு இருந்தால், அதற்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து வெளியே செல்வது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"பதவியைக்கூட இழக்கத் தயார்".. பட்டியலின பெண் தலைவி என்பதால் அந்தனூர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details