தமிழ்நாடு

tamil nadu

ஈபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 4:58 PM IST

Madras High Court: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதால், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரிய வழக்கின் விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

admk-chief-palanisamy-filed-defamation-case-against-journalist-mathew-samuel-mhc-adjourned
எடப்பாடி பழனிசாமி டெல்லி பத்திரிகையாளருக்கு எதிராகத் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்..

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதால், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரிய வழக்கின் விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்ற தனி நீதிபதி, சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு இன்று (ஜன. 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் உத்தரவின்படி வரும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாகப் பழனிச்சாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

ABOUT THE AUTHOR

...view details