தமிழ்நாடு

tamil nadu

“ஆருத்ரா முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” - இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் ஆர்.கே.சுரேஷ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 7:43 AM IST

Aarudhra scam: ஆருத்ரா மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆரூத்ரா நிறுவன முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை
நடிகர் ஆர்.கே சுரேஷ்

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இந்த மோசடி வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆருத்ரா கோல்ட் நிறுவன உரிமையாளர் ராஜசேகரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாயில் வைத்து சமீபத்தில் கைது செய்து, அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, ஆர்.கே.சுரேஷைப் பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இதனையடுத்து, ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நான் டிசம்பர் 12ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகிறேன். அதுவரை என்னை கைது செய்ய வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே.சுரேஷிடம், விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆர்கே சுரேஷ் சென்னை அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையில், நேற்று விசாரணைக்காக ஆஜராகினார். அவரிடம் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, வாய் வழி மூலமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலத்தைப் பெற்றனர். மேலும், வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு, இன்றும் (டிச.13) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது, “ஆருத்ரா நிறுவன முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள்.

புத்தாண்டுக்காக கடந்த டிசம்பர் மாதம் துபாய் சென்றிருந்தேன். அங்கே மனைவிக்கு பிரசவமானது. குழந்தை பிறந்து 15 நாட்கள் ஐ.சி.யுவில் இருந்தது. குழந்தையின் உடல் நலனை கருத்தில் கொண்டு, அங்கே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதற்காக காத்திருந்தேன். இப்போது நேரில் வந்து எனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நாளையும் (டிச.13) ஆஜராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு - பிரதமர் மோடியின் வெளிப்பாடு என்ன?

ABOUT THE AUTHOR

...view details