தமிழ்நாடு

tamil nadu

இனி, தமிழ்நாட்டு எல்லைக்குள் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டாஸ்?!

By

Published : Feb 16, 2023, 4:23 PM IST

தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

Goondas detention to taken who dump medical waste in reserve forest state report NGT
தமிழ்நாட்டு எல்லைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் ஆள்அரவமற்ற பகுதிகள், வனப்பகுதிகளில் அண்டை மாநிலங்களில் இருந்து லாரிகளில் குப்பையை எடுத்து வந்து கொட்டிச்செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வன விலங்குகளும் பெரிதளவில் பாதிப்படைகின்றன.

அதேபோல் மருத்துவக் கழிவுகளையும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகப் பகுதிகளில் கொட்டுவதற்கு லாரிகளில் எடுத்து வரப்படுகின்றன. விதிமுறைகள்படி மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டிய ஆபத்தான மருத்துவக் கழிவுகளை, இப்படி வனப்பகுதிகளிலும் ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்களில் கொட்டிச் செல்வதால் மோசமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன.

இதேபோல் ஆனைமலை சரணாலயம் அருகில் மருத்துவக்கழிவுகள் கொட்டும் முயற்சி முறியடிக்கப்பட்டு, லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லை மாவட்டங்களில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

மேலும், சில இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்ட முயற்சித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருவதால், இந்த குற்றத்தில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கும் வகையில், குண்டர் சட்டத்தின் வரம்பை பொதுநலனை கருதி விரிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தஞ்சையில் ஆன்லைன் மூலம் ஹைடெக் விபச்சாரம்.. 2 பெண்கள் உட்பட மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details