தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய்கள் பிரச்னை.. மாநகராட்சியின் நடவடிக்கை என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 7:50 PM IST

Menace of stray dogs in Chennai: சென்னை மாநகரில் மட்டும் உள்ள 1.5 லட்சம் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பலரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தடுக்க மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை மாநகரில் தற்போது, கால்நடைகள் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக, சென்னை நகருக்குள் மக்கள் தினமும் கால்நடையால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பிரச்னைகளை தினமும் சந்தித்து வருகின்றனர். இதில் கால்நடை பிரச்னை என்பது பார்த்தால், இரண்டு கால்நடைகளால்தான் சென்னையில் விபத்துகள் அதிமாக ஏற்படுகிறது.

ஒன்று 'மாடு' மற்றொன்று 'தெருநாய்கள்'. கடந்த ஆகஸ்ட் மாதம் அரும்பாக்கத்தில், சிறுமியை மாடு முட்டிய சம்பவத்திற்குப் பிறகு, சென்னையில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை மாநகராட்சியால் தீவிரமடைந்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும், தற்போது தெருவுக்கு தெரு சென்னையில் நாய்கள் பிரச்னை (Menace of stray dogs in Chennai) அதிகமாகிவிட்டது.

நாய்களால் சந்திக்கும் விபத்துகள்:சென்னையில் 34,640 சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன. இதில் தற்போது, மொத்தம் 1.5 லட்சம் நாய்கள் உள்ளன. இந்த நாய்களால் தினமும் மக்கள் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். நகரில் தற்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், கார்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக துரத்துவதை நாம் எல்லாரும் பார்த்து இருப்பதோடு, நாமும் அதைச் சந்தித்து இருப்போம்.

குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதனால், இருசக்கர வாகனத்தில் செல்வபவர்கள் நாயிடம் இருந்து தப்பிக்கவும், அதே நேரத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் எண்ணி பதற்றமடைந்து கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் தொடர்கதைகளாகின்றன. மேலும் இரவு நேரங்களில், தனியாக சென்றால் நாய்கள் ஒன்றோடொன்று சண்டை போடுவதும், சாலைகளில் திடீரென்று குறுக்கே வருவதும், நடந்து செல்லும் சிலரை துரத்தி கடிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதனிடையே, நாய்கள் பிரச்னை குறித்து தினமும் மாநகராட்சிக்கு ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் புகார்கள் வந்து கொண்டிருக்கிறன. மாநகராட்சியும், குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று நாய்களைப் பிடித்து செல்கின்றனர். ஆனாலும், நாய்கள் பிரச்னைக்கு ஒரு முடிவு இல்லாமல் உள்ளது.

இதற்காக, சென்னை மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் இருக்கும் 15 மண்டலங்களுக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து, சென்னையில் இருக்கும் இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கால்நடை உதவி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய்கள் பிரச்னை

இந்த சிகிச்சைக்குப் பின்னர், நாய்கள் மீண்டும் அதே பகுதியில் விடப்படுகின்றன. ஆனால், தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் 3 இடங்களில் ரூ.19 கோடியில் 'நாய் கருத்தடை மையம்' (Dog Sterilization Center Chennai) அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தது, 'சென்னையில் தற்போது கால்நடைகள் பிரச்னைகள் இருப்பது உண்மைதான். அதை சென்னை மாநகராட்சி விரைவில் சரி செய்து வருகிறது. குறிப்பாக, மாடுகள் மற்றும் நாய்கள் குறித்து ஆராய்வதற்கு அமைத்த குழு அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக கடந்த 27 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடச்சியாக, தற்போது சென்னையில் புதிதாக நாய்கள் கருத்தடை மையங்கள் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு ஆகிய 3 இடங்களில் ரூ.19 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த மையங்கள் அடுத்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கிவிடும். மேலும், இந்த மையங்களில் புதிதாக சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டு நாய்களுக்கு கருத்தடை செய்ய சிறப்பு அறை, நாய்களுக்கு உணவு அளிக்க சமையல் அறை, கழிப்பறை, பரிசோதனை அறை, ரத்த பரிசோதனை ஆய்வகம் என்று அமைய உள்ளன. இந்த மையத்தில் நவீன ஆபரேஷன் தியேட்டர், மருந்து அறை என பல்வேறு வசதிகளுடன் இருக்கும்' என அவர் தெரிவித்தார்.

நாய்கள் பிரச்னைக்கு தீர்வு:நாய்கள் கருத்தடை தொடர்பாக, ப்ளூ கிராஸ் பொதுமேலாளர் வினோத் கூறியதாவது, 'சென்னை போன்ற பெரிய நகரத்தில் நாய்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க கருத்தடை ஒன்றே தீர்வு. இந்த கருத்தடை என்பது தொடர்ந்து நடக்க வேண்டும். சென்னையில் இருக்கும் நாய்களின் எண்ணிக்கையில், பாதி நாய்கள் பெண் நாயாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஒரு நாய் என்பது 5 முதல் 6 குட்டிகள் ஈன்றுவிடும். மேலும் கருத்தடை என்பது தொடர்ந்து ஒரு ஆண்டுகளில் 75 சதவீத நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டுமே சென்னையில் நாய்களின் எண்ணிக்கையானது கட்டுக்குள் வரும்' என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 'சென்னை மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கருத்தடை செய்ய அனுமதி இருக்கிறது. ஆனால், அதை யாரும் செய்ய முன் வருவது இல்லை. மேலும், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான வசதிகள், மருத்துவ வசதிகள் போன்றவை அதிக அளவில் இருந்தால், விரைவில் அதனைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்' என தெரிவித்தார்.

நாய்கள் பிரச்னை குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது, 'தெருக்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இதனிடையே, நாய்களுக்கு தன்னார்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் என சிலர் தொடர்ந்து உணவு அளித்து வருகின்றனர். இது தவறில்லை.

தொடர்ந்து அப்படி உணவு அளிப்பதால், நாய்கள் அங்கேய இருந்து விடுகின்றன. உணவு அளித்தால் மட்டும் போதுமா? சில நாய்களுக்கு உடல்நலக்குறைவு, வாகனங்களில் அடிபடுவது என இருக்கிறது. இது குறித்து உடனடியாக ப்ளு கிராஸ் அமைப்பு அல்லது மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கிறோம்' என்று தெரிவித்தனர்.

9 மாதங்களில் 1,000 கருத்தடை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களைப் பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. இதில் 80 பணியாளர்கள் அதாவது, ஒரு வண்டிக்கு 5 நபர்கள் என்ற கணக்கில் உள்ளனர். சென்னையில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 15,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் தற்போதுவரை 10,500-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லப்பிராணிகள் வளர்ப்போரின் கவனத்திற்கு:சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், வீதிகளில் தனியாக செல்வோருக்கு நாய்களால் உருவாகும் அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், ரேபிஸ் வைரஸ் பரவலின் தாக்கத்தை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில், நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய்க்குட்டிகளுக்கு, அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரையின்படி அந்தந்தப் பருவங்களில் போட வேண்டிய தடுப்பூசிகளைப் போடுவது முக்கியமானது என்பதை மறவாமல் இருக்க வேண்டும். இவை நாய்களுக்கு மட்டுமில்லை, பிற செல்லப்பிராணிகளுக்கும் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

இதையும் படிங்க:"ரேஷனில் வழங்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்க" - கி.வெங்கட்ராமன் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details