தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் கரோனா: பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம் - முதலமைச்சர் உறுதி

By

Published : Dec 22, 2022, 10:38 PM IST

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மீண்டும் கொரோனா: பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்
மீண்டும் கொரோனா: பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (22.12.2022) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் எடுத்துரைத்தார்.

சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் சுகாதாரச்செயலாளர் சுற்றறிக்கையின்படி, கோவிட் தொற்று எண்ணிக்கை கண்காணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை (Whole Genomic Sequencing) செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள கரோனா தொற்று XBB வகையாகும். இது BA-2 உருமாறிய கரோனாவின் உள்வகையாகும். சில ஆசிய நாடுகளில் தற்போது பரவி வரும் BF-7 வகையான கரோனா தொற்று BA-5-ன் உள்வகையாகும். இத்தகைய BA-5 தொற்று தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்ட இந்த தொற்றின் வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையிலும், அரசு மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதிகள் கூடுதலாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, கோவிட் பரிசோதனை செய்யவும் மற்றும் கோவிட் தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழுமரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய்ப் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும் இன்புளூயன்சா மாதிரி காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று (ILI & SARI) ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் கரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி, குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில் சமூக இடைவெளியினை கடைபிடிக்கவும்; நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச விமானநிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி (SOP) கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்களைப் பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details