தமிழ்நாடு

tamil nadu

’ஆக்கிரமிப்பில் இருக்கும் 75 இடங்கள் ஒரு மாதத்துக்குள் கைப்பற்றப்படும்’

By

Published : Sep 9, 2021, 8:42 PM IST

பண்ருட்டி தொகுதியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 75 இடங்கள் ஒரு மாதத்துக்குள் கைப்பற்றப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

minister-sekar-babu
minister-sekar-babu

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.09) காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்), பண்ருட்டி தொகுதியின் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உறுப்பினர் வேல்முருகன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

“பண்ருட்டி தொகுதியில் 118 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 75 இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் தனிநபர்கள் பல இடங்களை தரை வாடகைக்கு குத்தகைக்கு விட்டு பல கோடி அளவில் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

நகர நிர்வாக ஆணையர் காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”இந்தப் புகார்கள் அனைத்தும் 125 நாள்களுக்கு முன்பாக வந்த புகார்கள். இது சட்டத்தின் ஆட்சி. யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்ருட்டி தொகுதியில் உள்ள 152 இடங்களில், 118 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 75 இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேடாக வசூல் செய்யப்பட்ட ஐந்து லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு திருக்கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, முதலமைச்சர் தலைமையில் இருக்கும் காவல்துறையை யாரும் உருட்டி மிரட்டி பணிய வைக்க முடியாது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன. இன்று (செப்.09) மாலை வடபழனியில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 46 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட உள்ளது. பண்ருட்டி தொகுதியில் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு 75 ஆக்கிரமிப்பு இடங்கள் ஒரு மாதத்துக்குள் மீட்கப்படும்” என உறுதிப்பட கூறினார்.

இதையும் படிங்க : சட்டப்பேரவை நிகழ்ச்சி நேரலை - முதலமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details