தமிழ்நாடு

tamil nadu

சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர்கள் கடத்தல் முயற்சி! வசமாக சிக்கிக் கொண்ட கடத்தல் குருவி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 7:48 AM IST

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.28 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

சென்னை:விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலர்களை கடத்த முயன்ற பயணியை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (செப். 27) புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இதனால் விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் சுற்றுலாப் பயணி விசாவில் சிங்கப்பூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சோதனை செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மீது சந்தேகம் அடைந்தனர்.

இதையும் படிங்க:கரூர் திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கு; 24 மணி நேரத்திற்குள் இருவர் கைது!

அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். சோதனையில், ஆடைகளில் எதுவும் மறைத்து வைத்து இருக்கவில்லை என தெரியவந்தது. எனவே அவருடைய சூட்கேஸ் மற்றும் பைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். சோதனையில், அவருடைய சூட்கேசில் ரகசிய அறை வைத்து செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அதிகாரிகள் சூட்கேஸின் ரகசிய அறையை பரிசோதனை செய்தனர். சூட்கேஸின் ரகசிய அறையில் கட்டு கட்டாக, வெளிநாட்டு பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். ஏறத்தாழ ரூ.28 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்ததுடன் அவரின் சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சுங்கத்துறை விசாரணையில், அவர் வெளிநாட்டுக்கு கரன்சியை கடத்தும் கடத்தல் குருவி என்று தெரிய வந்தது. மேலும், அவரிடம் இந்த வெளிநாட்டு பணத்தை கொடுத்துவிட்ட முக்கிய கடத்தல் ஆசாமி யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வாணியம்பாடி அருகே 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு; தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details