தமிழ்நாடு

tamil nadu

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் குவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 5:30 PM IST

Diwali festival 2023: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு வகையான தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னையில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்

சென்னை:மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் தீபாவளி பண்டிகையை (Diwali Festival 2023) முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னை தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள்,போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

இதனால் சென்னையில் சட்டம், ஒழுங்கு. குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்:தி.நகர்,வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னையில் பலபகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் 7, வண்ணாரப்பேட்டை 3, கீழ்பாக்கம் 3 மற்றும் பூக்கடை 4 என 4 இடங்களிலும் மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 21 பைனாகுலர் மூலமும் கண்காணித்து குற்றச் செயல்கள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனர்.

குற்றவாளிகள் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு: தி.நகர், வண்ணாப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகள் என மொத்தம் 5 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்கள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்வுகளை கண்காணித்து குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் பெரிய LED திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரபப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

ட்ரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு:மேலும் 19 ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் அறிவித்துக் கொண்டும் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 17 இடங்களில் ஸ்பீக்கர்கள் மூலம் ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தி.நகர் மற்றும் பூக்கடை பகுதியில் தலா 2 என 4 ட்ரோன் கேமிராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் மூலம் புகார் செய்யலாம்: பழைய குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்காக Face Recognition System என்ற செல்போன் செயலி மூலம் வாட்ஸ்அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறை நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி சென்றுகண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் சரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், சென்னை காவல்துறையின் நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலம் பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பெண்கள் நகைகளை பாதுகாக்க துணி கவசங்கள்: பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண்காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, சென்னையில் கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details