தமிழ்நாடு

tamil nadu

சென்னை குருநானக் கல்லூரியில் 18 மாணவர்கள் டிஸ்மிஸ்.. வெடி விவகாரத்தில் காவல்துறை விளக்கம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 10:44 PM IST

chennai Guru nanak College: கல்லூரியில் பட்டாசு வீசி மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது பள்ளி நிர்வாகம்!
18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது பள்ளி நிர்வாகம்!

சென்னை: குருநானக் கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட விவாகரத்தில், மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசவில்லை, நாட்டு பட்டாசு மட்டுமே வீசியதாக தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவர்களுக்குள் நடந்த மோதலில் கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும், கல்லூரியில் பட்டாசு வீசி மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் மோதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன் விரோதம் காரணமாக இரு தரப்பு மாணவர்களுக்குள் நடந்த மோதல் எனவும் அதில் இருவர் நாட்டு பட்டாசுகளை கொண்டு வந்து எதிர்தரப்பு மீது வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் வீசியது நாட்டு வெடிகுண்டு என சிலர் பொய்யாக பரப்பி வருவதாகவும், அது வெறும் நாட்டு பட்டாசு என அவர் விளக்கம் அளித்தார். மேலும் பேசிய அவர், இச்சம்பவம் தொடர்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருளை பொதுவெளியில் பயன்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் நான்கு மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளதாகவும், அதில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டு மீதமுள்ள மூன்று மாணவர்களை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:தொடரும் மாணவ வன்முறை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்?

மேலும் தொடர்ச்சியாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், இதனால் குற்றங்கள் தற்போது குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த சமரசமும் கிடையாது என அவர் கூறினார்.

மற்ற கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டையை பார்த்து தாக்குதல் நடத்துகின்றனர். மாநிலம் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கியது தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கல்லூரி நேரங்களில் காலை மாலை என பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் மாணவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், அட்டகாசத்தில் ஈடுபடும் வழி தடங்களையும் கண்டறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஒரு வருடத்திற்கு பேருந்துகளில் மேலே ஏறி அட்டகாசம் செய்யும் செயல்களும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:டிடிவி தினகரனின் அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அபதாரம் ரூ.28 கோடியாக குறைப்பு!

ABOUT THE AUTHOR

...view details