தமிழ்நாடு

tamil nadu

அஞ்சல்துறையிலுள்ள கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 8:59 PM IST

Gramin Dak Sevak: அஞ்சல் துறையில் பணியாற்றி வரும் GDS எனப்படும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வரும் டிச.12 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Gramin Dak Sevak
அஞ்சல்துறை GDS ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12 முதல் காலவரையற்ற போராட்டம்

செங்கல்பட்டு: அஞ்சல் துறையின் ஒரு முக்கிய அங்கமாகக் கிராமின் டாக் சேவாக் (Gramin Dak Sevak) என அழைக்கப்படும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உள்ளனர். இந்த கிராமிய அஞ்சல் ஊழியர்கள்கிராமப்புறங்களில் உள்ள கிளை அஞ்சலக அதிகாரிகளாகவும், தபால் பட்டுவாடாச் செய்யும் ஊழியர்களாகவும் பணி செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கானப் பணி நேரம் என்பது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே. இவர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு, நிகர ஊதியமாக ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படுகின்றது.

மேலும், அஞ்சல் துறையில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியமர்த்தப்பட்டிருக்கும் இதே வேலையைச் செய்வோருக்கு, கிராமிய அஞ்சல் ஊழியர்களை விட மும்மடங்கு ஊதியம் கூடுதலாக அளிக்கப்படுகிறது என்கின்றனர். எனவே, தங்களையும் நிரந்தரப் பணியாளர்களாகக் கருதி அனைத்துப் பலன்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.12 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்தியக் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளில், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் குறித்த பரிந்துரைகளை மத்திய அரசும், அஞ்சல் துறையும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகள்: கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எட்டு மணி நேரப்பணி மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்கிட வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பலன்களையும் நிறைவேற்ற வேண்டும்.

கமிட்டி பரிந்துரை செய்த அடிப்படை ஊதியத்தைக் கடந்த நவம்பர் 2016 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். விடுப்பு சேமித்து பணமாக்கும் வசதி வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என அகில இந்தியக் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தமிழக மக்களை உயிர் காப்பாளர்களாக மாற்றும் 'ஜீவன்' பயிற்சி திட்டம்..! - டாக்டர் அபுல்ஹாசன்..

ABOUT THE AUTHOR

...view details