தமிழ்நாடு

tamil nadu

மனைவியை குத்திக் கொன்று தப்பித்தபோது வாகன விபத்தில் மருத்துவர் காயம்

By

Published : Feb 20, 2021, 11:30 AM IST

Updated : Feb 20, 2021, 2:24 PM IST

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பித்தபோது ஏற்பட்ட வாகன விபத்தில் கணவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணை நடத்தும் காவல் துறை
விசாரணை நடத்தும் காவல் துறை

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல் குமார். இவர் சென்னை அடுத்துள்ள புறநகர்ப் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்தார்.

இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியிலுள்ள ஆனந்த் நகரில் வசிக்கும் முஹாரி என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது.

கோகுல் குமாருக்கும் அவரது மனைவி கீர்த்தனாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். அந்த வழக்கு தற்போது நிலுவையிலுள்ள நிலையில் கீர்த்தனா தனது கணவரை விட்டுப் பிரிந்து, கடந்த ஒரு வருடமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலுள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், நேற்று (பிப். 19) தனது மனைவி வீட்டுக்குச் சென்றார் கோகுல் குமார். அப்போது, கோகுலுக்கு, அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கோகுல், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, கீர்த்தனாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதனைத் தடுக்கவந்த மாமனாரையும் குத்தியுள்ளார். மேலும், உயிருக்குப் போராடிய மனைவி மீது, கோகுல் தனது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில், கீர்த்தனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முஹாரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைக் கொலைசெய்த பதற்றத்தில் தப்பித்த கோகுல், தனது காரில் சென்றபோது அச்சிறுப்பாக்கம் அருகே விபத்துக்குள்ளனது. இதில், அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

விசாரணை நடத்தும் காவல் துறை

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மனைவி, மாமனாரை கத்தியால் குத்திய கோகுல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சிசிடிவி: நீலாங்கரையில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை

Last Updated : Feb 20, 2021, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details