தமிழ்நாடு

tamil nadu

புதுப்பொலிவுடன் வேடந்தாங்கல் சரணாலயம் அமைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

By

Published : Jun 18, 2023, 2:24 PM IST

மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா போல வேடந்தாங்கல் சரணாலயத்தையும் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்கா போல வேடந்தாங்கல் சரணாலயமும்  சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட வேண்டும் என ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
வண்டலூர் உயிரியல் பூங்கா போல வேடந்தாங்கல் சரணாலயமும் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட வேண்டும் என ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு:மதுராந்தகம் அருகே அமைந்துள்ளது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் அமைந்துள்ள ஏரிக்கு வலையபுத்தூரில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்துக் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் நேற்று (ஜூன் 17) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்கள் வருகை எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதால் சரணாலயத்தை கூடுதல் அம்சங்களுடன் பொலிவுபடுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என ராகுல்நாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரத்தை அதிகரிக்கும் நோக்கில், மக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பஞ்சாயத்து மூலம் ஆங்காங்கே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், “வேடந்தாங்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பேருந்து நிறுத்தம், நிழற்குடை போன்றவை முறையாக அமைக்கப்பட வேண்டும். வனத்துறை சார்பாக பறவைகள் சரணாலயம் பற்றி ஆர்வலர்கள், சுற்றுலாவாசிகள் தெரிந்து கொள்வதற்காக நெடுஞ்சாலை ஓரங்களில் பறவைகளின் பெயர்கள், படங்களுடன் கூடிய தகவல் பலகை வைக்க வேண்டும்.

மகளிர் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் டி ஷர்ட், தொப்பி போன்ற பொருட்களைக் கடைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து, பறவைகள் சரணாலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு ஊராட்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை மூலம் பறவைகள் சரணாலயத்துக்குள் இருக்கும் காலியான இடங்களில் மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும். வேடந்தாங்கல் ஏரியில் உள்ள இரண்டு மதகுகளில் ஷட்டர் போட வேண்டும். அதன் பிறகுதான் வயலூர் ஏரியிலிருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வசதி கொண்டு வர முடியும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான மகாபலிபுரம், முட்டுக்காடு, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்றவைகள் போல வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும் எப்போதும் பார்வையாளர்கள் வரும் சுற்றுலாத் தலமாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேல்மருவத்தூர் கோயிலுக்கு வரும் பொதுமக்களைக் கவரும் வண்ணம் நெடுஞ்சாலைகளில் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும். திருக்கழுக்குன்றம் வழியாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வர ஏதுவாக தூரத்தைக் குறிக்கும் கிலோ மீட்டர் உடன் கூடிய வழிகாட்டிப் பலகை வைக்க வேண்டும்.

அங்கு வரும் பார்வையாளர்கள் பைனாகுலர் மூலமாக பறவைகளைப் பார்க்க வனத்துறை ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும், வேடந்தாங்கல் ஏரிகளில் உள்ள பழைய மீன்களை அகற்றிவிட்டு, புது மீன்களை விட மீன்வளத்துறை மூலமாக ஏற்பாடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும், இது குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு சார் ஆட்சியர் லட்சுமிபதி, வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்துபாலா மற்றும் வன உயிரினக் காப்பாளர் பிரசாந்த், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:BJP's animated video: ஆதிபுருஷ் ராவணனாக ராகுல் காந்தியை சித்தரித்த பாஜக!

ABOUT THE AUTHOR

...view details