தமிழ்நாடு

tamil nadu

ரத்தான திருமணம்.. பணம் தர மறுத்த சென்னை ஜெயச்சந்திரன் மஹால்; அரியலூர் கோர்ட் குட்டு

By

Published : Jan 19, 2023, 7:21 PM IST

திருமணத்திற்கு மண்டபத்தை பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தநிலையில், திருமணம் ரத்தாகியும் பணத்தை திருப்பித் தர மறுத்த சென்னை ஜெயச்சந்திரன் மஹால் திருமண மண்டபத்திற்கு அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெயச்சந்திரன் மஹால்
ஜெயச்சந்திரன் மஹால்

அரியலூர்: சென்னை பெரும்பாக்கம் சௌமியா நகரைச் சேர்ந்தவர், கிருஷ்ணமோகன். இவர் தனது மகள் திருமணத்தை நடத்த சென்னை தியாகராய நகர் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஜெயச்சந்திரன் மஹால் என்ற திருமண மண்டபத்தை நாடினார்.

மண்டபத்தின் வாடகை 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் எனவும், கலால் மற்றும் சேவை வரி 33 ஆயிரத்து 750 ரூபாய் எனவும் அப்போது தெரிவித்துள்ளனர். இதை அடுத்து முழுத் தொகையான 2,58,750 ரூபாயை செலுத்திய கிருஷ்ணமோகன், 02.02.2017, 03.02.2017, 04.02.2017 ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் ஜெயச்சந்திரன் மஹால் திருமண மண்டபத்தை புக்கிங் செய்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தர்மசங்கட சூழ்நிலை காரணமாக, கிருஷ்ணமோகன் இல்ல திருமண விழா தடைபட்டது. இதையடுத்து 12.12.2016அன்று ஜெயச்சந்திரன் மஹால் மேனேஜரிடம் கட்டிய தொகையை திருப்பித் தருமாறு கிருஷ்ணமோகன் கேட்டுள்ளார்.

ஆனால், கல்யாண மண்டப விதிமுறைகளின்படி அட்வான்ஸ் தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என்று ஜெயச்சந்திரன் மஹால் மேனேஜர் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமணமே நடத்தாத நிலையில், தன்னிடம் வாடகை பணம் மற்றும் கலால் சேவை வரி வசூலிக்கப்பட்டது முறையற்றது. மேற்படி திருமண மண்டப நிர்வாகத்தினர் தனக்கு இழப்பீடுத் தர வேண்டும் என்று சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமோகன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கானது சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராம்ராஜ் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:

* ’திருமண நிகழ்வுக்காக திருமண மண்டபத்துக்கு வாடகை தொகையை முழுமையாக கட்டியவர்களுக்கு அந்தத் தொகையை திருப்பி வழங்க முடியாது என்பது நியாயம் அற்றது.

* ரயிலில் பயணம் செய்வதற்காக நாம் முன்பதிவு செய்து, எதிர்பாராமல் பயணத்தை ரத்து செய்தால் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டும் பிடித்துக்கொண்டு மீத தொகையை திருப்பித் தந்துவிடும். அதுபோல திருமண மண்டபதாரர்களும், குறிப்பிட்ட சதவீதத் தொகையை மட்டும் தான் பிடித்துக் கொள்ள வேண்டுமே தவிர, முழுத் தொகையினையும் திருப்பித் தர முடியாது என்று கூறக்கூடாது.

* நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தேதிக்கு முன்னதாக எவ்வளவு நாட்களில் சம்பந்தப்பட்ட நபர் மண்டபம் பதிவை ரத்து செய்கிறாரோ அந்த நாட்களுக்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை மட்டும் தான் மண்டபம் எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகையை முழுமையாக சம்பந்தப்பட்ட பதிவுதாரரிடம் தான் கொடுக்க வேண்டும்.

* அந்த வகையில் மனுதாரர் 19.09.2016 அன்று வாடகை பணம் மற்றும் கலால் சேவை வரி போன்றவற்றை செலுத்தியுள்ளார். 12.12.2016 அன்று மண்டப பதிவை ரத்து செய்யக்கோரி தொகையை திரும்பத் தருமாறு கோரி உள்ளார்.

* ஆனால், ஜெயச்சந்திரன் மஹால் நிறுவனம் முழுத்தொகையும் திரும்பத் தரப்பட மாட்டாது என்று பதில் தெரிவித்துள்ளது.
* அவ்வாறு செய்வது நியாயமற்ற செயல் என்ற அடிப்படையில் மனுதாரர் மண்டப வாடகைக்காக செலுத்திய ரூபாய் 2 லட்சத்து 25ஆயிரம் என்ற தொகையில் 80 சதவீதத்தை மண்டபம் பிடித்துக் கொள்ளலாம், மீதத் தொகை 45 ஆயிரம் ரூபாயினை உடனடியாக சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு ஜெயச்சந்திரன் கல்யாண மண்டப நிறுவனத்தார் வழங்க வேண்டும்.

* திருமணமே நடக்கவில்லை, மண்டபமே பயன்படுத்தவில்லை; இதில் கலால் வரி, சேவை வரி எங்கிருந்து வந்தது. எனவே, கலால் வரி சேவை வரிக்காக வாங்கப்பட்ட 33 ஆயிரத்து 750 ரூபாயை உடனடியாக மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

*திருமண மண்டபத்தார் இதுபோல கட்டிய தொகை முழுவதையும் தரமாட்டேன் என்று தெரிவிப்பது நியாயம் அற்றது’ இவ்வாறு அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கணுமா? நீக்கணுமா?

ABOUT THE AUTHOR

...view details