தமிழ்நாடு

tamil nadu

ஈஸியாக தேர்வு எழுத டிப்ஸ் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

By

Published : Mar 14, 2023, 1:31 PM IST

அரியலூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Anbil Mahesh Poyyamozhi
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

+1 மாணவர்களை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

அரியலூர்:தமிழ்நாடு முழுவதும் பன்னிரென்டாம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கப்பட்டது. முதல் தேர்வில் வினாக்கள் எளிதாகக் கேட்கப்பட்டு மாணவர்களும் நன்றாகத் தேர்வை எழுதி முடித்தனர். அதைத் தொடர்ந்து, அடுத்த தேர்விற்குப் படிப்பதற்காக இன்று பிளஸ் 2 தேர்வர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாகத் தமிழ்நாடு முழுவதும் பதினொன்றாம் (பிளஸ் 1) வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக 90 பள்ளிகளைச் சேர்ந்த 8,370 மாணவ மற்றும் மாணவிகள் 44 தேர்வு மையங்களில் பிளஸ் 1 தேர்வை எழுதி வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென்று பார்வையிட வருகை புரிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் வகையில் முன்னதாகவே அரியலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் உள்ளிட்டோர் வந்து சேர்ந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணி அளவில் திடீரென்று அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்கு தேர்வுக்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மாணவ, மாணவிகளைச் சந்தித்து உரையாடினார். அதில், "நேற்று பன்னிரென்டாம் வகுப்புத் தேர்வு எளிதாக இருந்தது, ஆகவே உங்களுக்கும் எளிதாகத் தான் இருக்கும். என்ன படித்தீர்களோ அதை முழுமையாக எழுதுங்கள்.

தேர்விற்கு கடைசி நேரத்தில் படிப்பதை தவிர்த்து விட்டு, இவ்வளவு நாள் என்ன படித்தீர்களோ அதையே ஒருமுறை திருப்பி பார்த்துவிட்டுவந்து தேர்வு எழுதுங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் அனைவரும் எந்த வித பயமும், தயக்கமும் இல்லாமல் வெற்றிகரமாக தேர்வை எழுதுமாறு கூறினார். பின்னர் அனைவருக்கும் தேர்வை நல்ல முறையில் எழுத வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா உடன் இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சியை இத்தனை பரபரப்புக்கும் மத்தியில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் 'பிளம்ஸ்' அழகிய காட்சி!

ABOUT THE AUTHOR

...view details