தமிழ்நாடு

tamil nadu

நில வரி வாங்க மறுத்த விஏஓ; இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

By

Published : Jan 23, 2023, 5:54 PM IST

நிலவரி கட்டச் சென்றவரிடம் விஏஓ வரி வாங்க மறுத்த சம்பவம் தொடர்பாக இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

அரியலூர்: கோவிந்தபுத்தூர் வடக்குத்தெரு சின்னதுரை மகன் பிரபு. இவர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன்.15ஆம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கினேன். அப்போது, அந்த நிலத்துக்கு ராதாகிருஷ்ணன் அவரது உறவினர்கள் சிவக்கொழுந்து சுகன்யா ஆகிய மூன்று பேர் பெயரில் பட்டா இருந்தது.

கிரையம் கொடுத்து நிலத்தை வாங்கி விட்டதால், எனது பெயருக்குப் பட்டா வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் கூறினேன். ஆனால், ஏற்கனவே இருந்த பட்டாவில் எனது பெயரையும் சேர்த்துக் கூட்டுப் பட்டாவாக வழங்கப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை அணுகி நிலவரி செலுத்தத் தயாராக இருக்கிறேன். எனது நிலவரியைப் பெற்றுக் கொண்டு ரசீது வழங்க வேண்டும் என்று கோரினேன்.

ஆனால், கிராம நிர்வாக அலுவலர் என்னிடமிருந்து நிலவரி பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இதன் மூலம் பொதுமக்களுக்கு அவர் சேவையாற்றவில்லை. எனவே அவர் எனக்கு இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனுவானது அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதி ராம்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் தரப்பினர் ஆஜராகி மேற்படி சொத்து தொடர்பாக உரிமை இயல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது எனவே நிலவரி வசூலிக்கப்படவில்லை, நிலவரி வாங்க மறுத்துவிட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி ராம்ராஜ், “கிராம நிர்வாக அலுவலர் நில வரியை வாங்க மறுத்தார் என்ற கருத்தானது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழ் விசாரணைக்கு உகந்தது அல்ல.

மனுதாரர் எந்த ஒரு பொருளையும் விலை கொடுத்து வாங்கவில்லை. விலை கொடுத்து வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை ஆகியவை நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் கீழ் வரும். கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்ற சரியான காரணத்தைத் தெரிவித்துள்ளார். எனவே மனுதாரருக்கு எவ்வித இழப்பீடும் கிடையாது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சசிகலா மேல்முறையீட்டை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details