தமிழ்நாடு

tamil nadu

டோக்கியோ ஒலிம்பிக் 3ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்!

By

Published : Jul 25, 2021, 2:07 AM IST

Updated : Jul 25, 2021, 8:06 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (ஜூலை 25) பங்கேற்கும் இந்தியாவின் முக்கிய வீரர், வீராங்கனைகள் குறித்த தொகுப்பை காணலாம்.

டோக்கியோ ஒலிம்பிக் 3ஆம் நாள்
டோக்கியோ ஒலிம்பிக் 3ஆம் நாள்

டோக்கியோ (ஜப்பான்): இந்தியா ஒலிம்பிக்கின் இரண்டாம் நாளான நேற்று (ஜூலை 24) பல தோல்விகளையும், சில முன்னேற்றங்களையும் பெற்று, ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளது.

மேரி கோம், பி.வி.சிந்து உள்ளிட்ட முக்கிய வீரர், வீராங்கனைகள், முக்கியக் குழு போட்டிகள் குறித்த தகவல்கள் கீழ்வருமாறு;

பி.வி.சிந்து - பேட்மிண்டன்

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து, இன்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த க்சேனியா பொலிகார்போவா உடன் மோதுகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில், குரூப் 'ஜே' பிரிவில் இடம்பெற்றுள்ள இருவரும் சிந்துவிற்கு எளிமையானவர்கள் என்றே தோன்றுகிறது. அதனால், இன்றைய போட்டியில் அவர் வெல்வது உறுதி.

மேரி கோம் - குத்துச்சண்டை

இந்திய குத்துச்சண்டையின் முகமாக விளங்கும் மேரி கோம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கை தற்போது மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார். ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், இன்றைய போட்டியில் டோமினிகன் குடியரசு நாட்டின் ஹெர்னாண்டஸ் கார்சியா-வுடன் மோதுவிருக்கிறார்.

தன்னுடைய மணிமகுடத்தில் மிஸ்ஸாகும் ஒலிம்பிக் தங்கத்தை பெற இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் மேரி கோம் வெறித்தனத்தை இன்றிலிருந்தே நம்மால் காண இயலும்.

மனு பாக்கர், யஷஸ்வினி சிங் - துப்பாக்கிச் சுடுதல்

இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி தோல்வியுடன் இந்த ஒலிம்பிக்கை தொடங்கியுள்ளது. சௌரப் சவுத்ரி, அபிஷேக் வெர்மா ஆகியோரின் தோல்வி அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்து. இருப்பினும் மனு பாக்கர், யஷஸ்வினி சிங் மீதும் இன்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஏனென்றால், சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் யஷஸ்வினி சிங், இரண்டாமிடத்தில் மனுவும் இருப்பதால் இவ்வளவு எதிர்பார்ப்பு. இருவரும் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கின்றனர்.

திவ்யான்ஷ் பன்வார் - துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு பதக்கம் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளதற்கு கூடுதல் காரணம், திவ்யான்ஷ் பன்வார். 18 வயதேயான இவர், சர்வதேச அரங்கில் 8ஆம் இடத்தில் இருக்கிறார்.

இளவேனில், அபூர்வி என இளம் வீரர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், பான்வார் அடுத்த சுற்றுக்கு முன்னேறி, பதக்கம் வெல்ல இந்தியாவே காத்திருக்கிறது.

நேத்ரா குமணன் - பாய்மரப் படகுப்போட்டி

தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன், பெண்கள் லேசர் ரேடியல் பிரிவில் ரேஸ் 1 போட்டியில் இன்று பங்கெடுக்கிறார். இந்த போட்டி, இந்திய நேரப்படி காலை 8.35 மணிக்கு நடைபெறும்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

தன்னுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெரும் நம்பிக்கையில் இருக்கிறது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. இந்திய அணி இன்று(ஜூலை.25) ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 3ஆவது நாள் அட்டவணை: ஏழு போட்டிகளில் இந்திய வீரர்கள்

Last Updated : Jul 25, 2021, 8:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details