தமிழ்நாடு

tamil nadu

ஒடிசா முன்னுதாரணம்: மல்யுத்தத்திற்கு ஸ்பான்சராகும் உத்தரப் பிரதேசம்!

By

Published : Aug 26, 2021, 9:52 PM IST

வரும் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் வரை மல்யுத்த விளையாட்டிற்கு உத்தரப் பிரதேச அரசு ஸ்பான்சர் செய்ய இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தெரிவித்துள்ளது.

மல்யுத்தத்திற்கு ஸ்பான்சராகும் உத்தரப்பிரதேசம்
மல்யுத்தத்திற்கு ஸ்பான்சராகும் உத்தரப்பிரதேசம்

டெல்லி: டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா 1 தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை பெற்றது. இதில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா வெள்ளியையும், ரவிக்குமார் தாஹியா வெண்கலமும் வென்றிருந்தனர்.

இந்நிலையில், மல்யுத்த விளையாட்டிற்கான உள்கட்டமைப்பை வளர்த்தெடுக்கவும், வீரர்களின் பயிற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வரும் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை மல்யுத்த விளையாட்டை உத்தரப் பிரதேச அரசு ஸ்பான்சர் செய்ய இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

ஒடிசா போல் உத்தரப் பிரதேசம்

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "ஒடிசா ஒரு சிறிய மாநிலம். அந்த மாநிலமே ஹாக்கி விளையாட்டுக்கு பெரும் அளவில் உதவிபுரியும்போது, உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தால் கண்டிப்பாக முடியும் என்பதால் மல்யுத்தத்திற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை அணுகினோம். அவரும் அத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், வரும் 2024 ஒலிம்பிக் தொடர் வரை ரூ. 30 கோடியும் (வருடத்திற்கு தலா ரூ.10 கோடி); அதற்கடுத்த 2028 ஒலிம்பிக் தொடர் வரை ரூ. 60 கோடியும் (வருடத்திற்கு தலா ரூ.15 கோடி); கடைசி கட்டமாக 2032 ஒலிம்பிக் தொடர் வரை ரூ. 80 கோடியும் (வருடத்திற்கு தலா ரூ.20 கோடி) என மொத்தம் ரூ. 170 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு நாங்கள் முன்மொழிவு ஒன்றை அளித்துள்ளோம்.

அனைவருக்கும் பயன்

இந்த ஸ்பான்சர்ஷிப் திட்டம் அனைத்து ரக மல்யுத்த வீரர்களுக்கும் பயன்படும். மல்யுத்த மாணவர்கள் கூட இதனால் பயன் பெறுவார்கள். இதனால், எங்களால் தேசிய சாம்பியன்களுக்கு கூட பரிசு பணம் கொடுக்க முடியும். இதன்மூலம், ஜூனியர் வீரர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு தரமான பயிற்சிகளும், சிறந்த வழிகாட்டுதலும் அளிக்கப்படும்.

லக்னோவில் ஒரு மல்யுத்த அகாடமி நிச்சயம் கொண்டுவரப்படும், மற்றொரு அகாடமியை டெல்லி நோய்டாவில் உருவாக்குவதற்கும் முயற்சி எடுப்போம். அந்த அகாடமிக்கு சர்வதேச வீரர்களை அழைத்து, நம்முடைய வீரர்களுடன் தங்கி, பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். சர்வதேச வீரர்கள் இங்கு வருவது நம் வீரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று முதலமைச்சரிடம் கூறினேன்" என்றார்.

2018ஆம் ஆண்டில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் தொடர் வரை டாடா மோட்டார்ஸ் மல்யுத்தத்திற்கு ஸ்பான்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரர் செய்தது குற்றமில்லை - சர்ச்சைக்கு நீரஜ் முற்றுப்புள்ளி!

ABOUT THE AUTHOR

...view details