தமிழ்நாடு

tamil nadu

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராக அரசு அதிகளவில் நிதியளிக்கும்: அனுராக் தாக்கூர்

By

Published : Aug 16, 2021, 6:19 AM IST

வரும் 2024, 2028 ஒலிம்பிக் தொடர்களை கருத்தில் கொண்டு டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்திற்கு (TOPS) அரசு பெரிய அளவில் நிதியளிக்கும் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

டெல்லி:டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கான பாராட்டு விழாவை இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) நேற்று (ஆக. 15) நடத்தியது.

வீரர்களுக்கு ஊக்கத் தொகை

இந்த விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 75 லட்சம் ரூபாயும்; வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தாஹியா, மீராபாய் சானு ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, லவ்லினா போர்கோஹெய்ன், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா 25 லட்சம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, 41 ஆண்டுகள் கழித்து ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியினருக்கு தலா ரூ. 10 லட்சமும், நீரஜ் சோப்ராவின் பயிற்சியாருக்கு ரூ. 12.5 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களின் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், வெண்கலம் வென்றவர்களின் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 7.5 லட்சமும் வழங்கப்பட்டது.

மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த 128 இந்திய வீரர்களுக்கும் ஊக்கத் தொகைவழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. முதல் முறையாக இதுபோன்று ஊக்கத் தொகை இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் கொடுக்கப்படுவது குறிப்பிடதக்கது.

அரங்கமே நிறைந்திருக்கும்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,"வருங்காலத்தில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்திற்கு (TOPS) தாராளமாக நிதியளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பல விளையாட்டு வீரர்கள் பலனடைவார்கள்.

இதுபோன்று, 2024 ஒலிம்பிக் தொடருக்கு பின் நடைபெறும் பாராட்டு விழாவில் இந்த அரங்கமே பதக்கம் வென்றவர்களால் நிறைந்திருக்கும்" என வீரர்களுக்கு உற்சாகமளித்தார்.

TOPS என்றால் என்ன?

டார்கட் ஒலிம்பிக் போடியம் திட்டம் (TOPS) என்பது ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் இந்திய வீரர்களுக்கு உதவி புரியும் வகையில் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்.

இதன் பின் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா," கரோனா தொற்று காரணமாக இந்திய நாடே மிகவும் சோர்வடைந்து காணப்பட்டது. நீங்கள் வென்ற பதக்கம் பல இந்தியர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மீட்டுத் தந்துள்ளது" என்றார். இந்த விழாவில், பதக்கம் வென்ற அனைத்து வீரர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: LORDS TEST: இங்கிலாந்து தாக்குதலை சமாளித்த புஜாரா, ரஹானே இணை!

ABOUT THE AUTHOR

...view details