தமிழ்நாடு

tamil nadu

13-வது தேசிய சீனியர் ஹாக்கி; உ.பியை வீழ்த்தி தமிழ்நாடு த்ரில் வெற்றி!

By ANI

Published : Nov 26, 2023, 2:01 PM IST

13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு, கர்நாடக, ஹரியானா, பஞ்சாப்உள்ளிட்ட 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

13-வது தேசிய சீனியர் ஹாக்கி; உ.பியை வீழ்த்தி தமிழ்நாடு த்ரில் வெற்றி!
சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்

சென்னை:ஆடவருக்கான 13வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், ஹரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 28 மாநில அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதின.

இதன் லீக் சுற்று முடிவில் தமிழகம் உள்ளிட்ட 5 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், இத்தொடரின் 9வது நாளான நேற்று (நவ.25), கால் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் மோதின.

விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்ட இப்போட்டியில், 27வது நிமிடத்தில் உத்தரப் பிரதேச அணியின் மணீஷ் சஹாணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரைக் கோலாக மாற்றினர். இதனையடுத்து, 3வது நிமிடத்தில் உ.பி அணிக்கு கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை, சுனில் யாதவ் கோலாக மாற்ற, முதல் பாதி முடிவில் உபி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 3வது நிமிடத்தில், சுந்தரபாண்டி கோல் அடித்து தமிழ்நாடு அணியின் புள்ளிக் கணக்கினை தொடங்கி வைத்தார். பின்னர் 52 நிமிடத்தில் தமிழ்நாடு அணியின் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-2 என்ற சமநிலை எட்டியது.

போட்டி முடிவடைய 1 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், மீண்டும் ஒரு பீல்டு கோலை ஜோசுவா பெனடிக்ட் அடிக்க, 3-2 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி 8 நிமிடங்கள் வரை முன்னிலையில் இருந்த உபி அணிக்கு அடுத்தடுத்து கோல்களை அடித்த தமிழ்நாடு அணியின் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி உத்திர பிரதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதேபோல், ஹரியானா - ஒடிசா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி ஹரியானா அணி வெற்றி பெற்றது. மற்றொரு கால் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜார்கண்ட் அணிகள் மோதின. இதில் கர்நாடக அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இறுதியாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில், மணிப்பூர் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து அரையிறுதிப் போட்டிகள் இன்று (நவ.26) தொடங்கப்படவுள்ளன. இதன் முதல் போட்டியில், தமிழ்நாடு- ஹரியானா அணிகளும், இரண்டாவது போட்டியில் பஞ்சாப்- கர்நாடகா அணிகளும் மோதவுள்ளன.

இதையும் படிங்க:U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

ABOUT THE AUTHOR

...view details