தமிழ்நாடு

tamil nadu

Neeraj Chopra : இந்த பதக்கம் இந்தியாவுக்கானது.... வரலாற்று நாயகன் நீரஜ் சோப்ரா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 11:22 AM IST

World Athletics Championships: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் 88.17 மீட்டர் தொலைவுக்கு எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வென்ற தங்கப் பதக்கம் நாட்டுக்கானது என நீரஜ் சோப்ரா தெரிவித்து உள்ளார்.

நீரஜ் சோப்ரா
Neeraj Chopra

புடாபெஸ்ட்:ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன் ஈட்டி எறிதலின் இறுதி சுற்று நேற்று (ஆகஸ்ட் 27) இரவு நடந்தது. இதில் இந்தியா நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து முதல் இடம் பிடித்தார்.

இதன் மூலம் அவர் தங்கப் பதக்கம் வென்றார். 40 ஆண்டு கால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லெச் 86.67 மீட்டர் தொலைவுக்கு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதையும் படிங்க:World Athletics Championship: 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5வது இடம்! தேசிய சாதனை படைத்த வீராங்கனை!

மேலும் மற்ற இந்தியா வீரர்களான கிஷோர் 84.77 மீட்டரும், டி.பி மனு 84.14 மீட்டரும் ஈட்டியை எறிந்து 5 மற்றும் 6வது இடத்தை பிடித்தனர். இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் வெற்றியால் அவரது சொந்த ஊர் விழாக் கோலம் பூண்டு உள்ளது. அவருடைய குடும்பத்தினரும், பொது மக்களும் இந்த வரலாற்று சாதனையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

நீரஜ் சோப்ரா இப்போது வென்ற தங்கம் உள்பட உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மொத்தம் இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒலிம்பிக், ஆசிய போட்டி, காமன்வெல்த், யு-20 உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளிலும் தங்கம் வென்றவர் என்ற பெருமையும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வசமே உள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பின்னர் நீரஜ் சோப்ரா பேசியதாவது; "முதலில் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இந்த பதக்கம் இந்தியாவுக்கானது. ஒலிம்பிக் சாம்பியனாக இருந்து வந்த நான் தற்போது உலக சாம்பியனாகி உள்ளேன். என்னை தொடர்ந்து ஆதரித்த இந்தியர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் நாட்டுக்காக மேலும், சாதிக்க வேண்டும் என்ற அவசியத்தை இந்த பதக்கம் வலியுறுத்துகிறது. தொடர்ந்து பல்வேறு களத்தில் கடினமாக உழைக்க வேண்டும். உலகில் நம் நாட்டுக்கான பெயரை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:Neeraj Chopra : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம்.. 40 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details