தமிழ்நாடு

tamil nadu

பிபா உலகக் கோப்பை: போட்டியை நடத்தும் கத்தார் முதல் அணியாக வெளியேறியது...

By

Published : Nov 26, 2022, 7:42 AM IST

Updated : Nov 26, 2022, 9:04 AM IST

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார், செனகல் அணியிடம் தோல்வியைத் தழுவி முதல் அணியாகத் தொடரில் இருந்து வெளியேறியது.

பிபா
பிபா

தோஹா:பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் அணி, மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலை எதிர் கொண்டது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செனகல் அணியில், வீரர்கள் பவுலே தியா(Boulaye Dia) 41வது நிமிடத்திலும், ஃபமாரா டிடியோ(Famara Diedhiou) 48-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அணியை 2-0 என்ற கணக்கில் முன்னிலைக்குக் கொண்டு வந்தனர். மறுபுறம் தட்டுத் தடுமாறி விளையாடிய கத்தார் அணியில் ஆறுதல் அளிக்கும் வகையில், முகமது முன்தாரி 78-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

கோல் அடித்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட கத்தார் ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை. செனகல் வீரர் Bamba Dieng ஆட்டத்தின் இறுதியில் கோல் அடித்து கத்தார் ரசிகர்களின் கனவைக் கலைத்தார். பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது, டிபன்ஸ் ஆடியதில் சொதப்பல் உள்ளிட்ட காரணங்களால் கத்தார் அணி தோல்வியைத் தழுவியது.

தங்கள் மண்ணில் உலகக் கோப்பை விளையாட 12 ஆண்டுகளாகக் காத்திருந்த கத்தார், போட்டியிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. 92 ஆண்டு கால பிபா வரலாற்றில் தொடரை நடத்தும் அணியின் மோசமான செயல்பாடு இது எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து, ஈகுவடார் அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்ததும் கத்தார் வெளியேற முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மற்ற லீக் ஆட்டங்களில் தலா 2-0 என்ற கோல் கணக்குகளில் செர்பியாவை, பிரேசிலும், வேல்ஸ் அணியை ஈரானும் வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கின்றன.

இதையும் படிங்க:உலகக் கோப்பை கால்பந்து... ஒரு போட்டியில் வெற்றி... நாடு முழுவதும் விடுமுறை...

Last Updated : Nov 26, 2022, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details