தமிழ்நாடு

tamil nadu

பளு தூக்குதலில் பதக்கம் ஜஸ்ட் மிஸ் - இந்தியாவுக்கு உறுதியானது அடுத்த பதக்கம்...!

By

Published : Aug 1, 2022, 8:00 PM IST

காமன்வெல்த் தொடரில் ஆடவர் பளு தூக்குதல் 81 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அஜய் சிங் 4ஆம் இடத்தைப்பிடித்து பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார். இருப்பினும், லான் பால் விளையாட்டில் இந்தியா முதல் முறையாக பதக்கத்தை உறுதிசெய்துள்ளது.

பளு தூக்குதலில் பதக்கம் ஜஸ்ட் மிஸ்
பளு தூக்குதலில் பதக்கம் ஜஸ்ட் மிஸ்

பர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

இதில், ஆடவர் பளு தூக்குதலில் 81 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அஜய் சிங் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோ பளுவைத் தூக்கிய அவர், கிளீன் & ஜெர்க் பிரிவில் 176 கிலோ பளுவைத் தூக்கினார். அவரால் கிளீன் & ஜெர்க் பிரிவில் 180 கி. பளுவைத் தூக்க இயலாததால், மொத்தம் 319 கிலோவுடன் (143+176) ஆட்டத்தை நிறைவு செய்தார். இதன்மூலம், நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

இதே போட்டியில், இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே 325 கிலோ பளுவை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றது மட்டுமில்லாமல், காமன்வெல்த் தொடரில் அதிக பளுவை தூக்கி (இரு பிரிவையும் சேர்த்து) புது சாதனையையும் படைத்தார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கையில் ப்ரூஸ் 323 கிலோவுடன் வெள்ளியையும் கனடாவின் நிக்கோலஸ் வச்சோன் 320 கிலோவுடன் வெண்கலத்தையும் தட்டிச்சென்றனர்.

இதுபோன்று, லான் பால் (Lawn Ball) விளையாட்டில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. மேலும், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதனால், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. காமன்வெல்த் வரலாற்றில், லான் பால் விளையாட்டில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

லான் பால் விளையாட்டின் இறுதிப்போட்டி நாளை (ஆக. 2) நடைபெற உள்ள நிலையில், மகளிர் அணியைச்சேர்ந்த வீராங்கனைகள் ரூபா ராணி டிர்கி, நயன்மோனி சைகியா, லவ்லி சௌபே மற்றும் பிங்கி சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:CWG 2022: பளுதூக்குதலில் தங்கம் வென்றார் அச்சிந்தா ஷூலி!

ABOUT THE AUTHOR

...view details