தமிழ்நாடு

tamil nadu

ஹாக்கி பிதாமகன் தயான் சந்த்தை மறந்த இந்தியா!

By

Published : Dec 3, 2019, 3:59 PM IST

"நான் உயிரிழக்கும்போது எனக்காக உலகமே கண்ணீர் சிந்தும் ஆனால், இந்திய மக்கள் யாரும் ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்த மாட்டார்கள்" - இதைத் கூறியவர் வேறு யாரும் இல்லை இந்தியாவுக்கு மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்

Dhyan Chand
Dhyan Chand

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே,உலகம் முழுவதும் நம் நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்தவர், ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த். ஹாக்கியின் மாயஜாலக்காரர் என்றும், ஹாக்கியின் பிதாமகன் என்றும் அழைக்கப்படும் அவர், இந்தியாவுக்கு 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கித் தந்தார்.

தயான் சந்த்

சர்வதேச போட்டிகளில் 400க்கும் மேலான கோல்களை அடித்து சாதனைப் படைத்த அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29ஆம் தேதியைதான் தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடுகிறோம். 1936 ஒலிம்பிக் தொடரின் போது சர்வாதிகாரி ஹிட்லரின் சலுகையை ஏற்க மறுத்த வீரருக்கு, நாம் உரிய மரியாதையும் அங்கீகாரமும் தரவில்லை. ஹாக்கி விளையாடும்போது ஜாம்பவானாக இருந்த அவரது இறுதி காலத்தை குறித்துதான் பார்க்க போகிறோம்.

இந்தியாவுக்காக பல பெருமைகளை தேடித் தந்த இவருக்கு இன்றளவும் மத்திய அரசு பாரத ரத்னா விருது தரவில்லை என்பது வேறுகதை. 1979இல் தயான் சந்த் நுரையீரல் புற்றுநோயால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்தியில் ஆட்சி செய்த அரசு அவருக்கு எந்த விதத்திலும் நிதியுதவி செய்யவில்லை. அவரோ தனக்கு கிடைத்த 200 ரூபாய் பென்ஷன் பணத்தில்தான் தன்னை பார்த்துக் கொண்டார்.

அங்கு அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளாததால், அவர் ஜெனரல் வார்டில் சேர்க்கப்பட்டு, 12 நாட்கள் கழித்து 1979 டிசம்பர் 3இல் காலமானார். அவர் மறைந்த இன்றோடு 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய ஹாக்கியைப் பொறுத்தமட்டில் இது கருப்பு நாள்தான்.

தயான் சந்த்

தயான் சந்த் உயிரிழப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவர் கூறிய வார்த்தைகள் இவை:”நான் உயிரிழந்தால், எனக்காக உலகமே கண்ணீர் சிந்தும் ஆனால், இந்திய மக்கள் யாரும் எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த மாட்டார்கள்”.அதுமட்டுமின்றி, மருத்துவரிடம் அவர் இறுதி தருணத்தில் சொன்னது ஒன்றே ஒன்றுதான். அது “இந்தியாவில் ஹாக்கி இறந்து கொண்டிருக்கிறது”என்பது.

அவர் மறைந்தபோது இந்தியாவில் ஹாக்கியும் மறைந்துவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. இதை அவர் எப்படி கணித்தார் என்று தெரியவில்லை, ஏனெனில் இந்தியா கடைசியாக 1980இல்தான் தங்கப் பதக்கம் வென்றது. அதுவரை தங்கத்தில் ஜொலித்த இந்தியா அதன்பின் 39 ஆண்டுகள் ஆன பிறகும், வெண்கலப் பதக்கத்தைக்கூட பெற முடியாமல் தவிக்கிறது.

தயான் சந்த்

ஒருவர் தனது வாழ்வின் இறுதியில் போராடிக்கொண்டிருக்கும்போது உதவி செய்யாமல் அவரது பிறந்தாளை தேசிய விளையாட்டு நாளாகவும், அவருக்கு சிலை வைத்து வழிபடுவதிலும் மட்டும் நாம் அவருக்கான மரியாதை தந்துவிட்டோம் என்று அர்த்தம் கிடையாது. வாழும் போது ஒருவருக்கு மரியாதை தாருங்கள். அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே தவிர அனுதாபம் கிடையாது. இனி மத்தியில் யார் ஆட்சி செய்தாலும், முதுமைக்கால தயான் சந்த் போல் யாரையும் உருவாக்கிவிடாதீர்கல். மிஸ் யூ தயான் சந்த்!

இதையும் படிங்க:ஹிட்லருக்கே நோ சொன்ன 'தயான் சந்த்'!

ABOUT THE AUTHOR

...view details