தமிழ்நாடு

tamil nadu

WTC FINAL: டிராவை நோக்கி நகரும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

By

Published : Jun 23, 2021, 6:08 AM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆட்டம் டிராவை நோக்கிச் செல்கிறது.

WTC Final
WTC Final

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுதாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று (ஜூன் 22) ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் பேட்டிங்கைத் தொடங்கினர்.

முன்னிலை பெற்ற நியூசிலாந்து

ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ராஸ் டெய்லர் 11 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்த அணியின் நிக்கோலஸ் ஏழு ரன்களிலும், வாட்லிங் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 13 ரன்களிலும், ஜேமிசன் 21 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் 197 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி பறிகொடுத்தது.

மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார். ஆனால் வில்லியம்சன் 49 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் டிம் சவுத்தி வேகமாக 30 ரன்கள் சேர்த்த நிலையில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா நிதான ஆட்டம்

32 ரன்கள் பின்னடைவுடன் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் பத்து ஓவர்கள் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடிவந்த நிலையில், 11 ஓவரில் 8 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில், டிம் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சத்தீஸ்வர் புஜார வழக்கம்போல தனது தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 50 ரன்களை கடந்த நிலையில், 27 ஓவரில் இரண்டாம் விக்கெட்டை பறிகொடுத்தது. மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டின் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக கேப்டன் விராத் கோலி களமிறங்கினார். இறுதியில் ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 64 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ரன்னிலும், கோலி 8 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

ரிசர்வ் நாளாக ஆறாம் நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில் போட்டியின் முடிவு டிராவை நோக்கிப் பயணிக்கிறது.

இதையும் படிங்க:யூரோ 2020 ரவுண்ட் அப்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரியா, டென்மார்க் அணிகள்

ABOUT THE AUTHOR

...view details