தமிழ்நாடு

tamil nadu

17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி: ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்!

By

Published : Jul 30, 2023, 2:29 PM IST

ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

stuart broad retirement
ஸ்டூவர்ட் பிராட் ஒய்வு

லண்டன்: லண்டனில் நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் முடிவில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு அறிவிப்பை வெளியிடுள்ளார். 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் என்றாலே நாம் அனைவருக்கும் யுவராஜ் அடித்த 6 சிக்சர்கள் தான் நினைவுக்கு வரும். அந்த மோசமான நிகழ்வில் இருந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை சிறந்த வேகப்பந்து வீச்சாளராக நிலை நிறுத்தியுள்ளார். முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கிறிஸ் பிராடின் மகனான ஸ்டூவர்ட் பிராட் 2007ம் ஆண்டு மைக்கேல் வாகன் தலைமையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 845 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 602 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையைப் படைத்து உள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் (800), ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே (708), இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் (688), இந்திய வீரர் அனில் கும்ளே (619) ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். இந்த பட்டியலில் ஸ்டூவர்ட் பிராட் 5வதாக இணைந்திருக்கிறார். மேலும், இந்த பட்டியலில் இடம் பெற்ற இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இவர் என்பதும் இதில் அடங்கும்.

இதுவரை சர்வதேச டெஸ்ட்டில் 20 முறை 5 விக்கெட்களையும் 3 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதோடு 13 அரைசதம், 1 சதம் என 3640 ரன்களை சேர்த்துள்ளார். இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று இரவு அறிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறியதாவது, “இது ஒரு அற்புதமான பயணம். நாடிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். நான் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது. இதில் ஒரு அங்கமாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த தொடர் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது.

சில வாரங்களாகவே நான் ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல். அதனால்தான், எனது கடைசி போட்டி ஆஷஸ் ஆக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது குறித்து நேற்று இரவு ஜோ ரூட், ஜேம்ஸ் அண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடன் எனது ஓய்வு பற்றி கூறினேன். இது சரியான நேரமாக இருக்கும் என்று கருதியதால் எனது ஓய்வை அறிவிக்கிறேன்” எனக் கூறினார்.

மேலும், 41 வயதான ஜேம்ஸ் அண்டர்சன் சமீபத்தில் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார். இந்நிலையில், 37 வயதே ஆகும் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Ashes Test: வலுவான நிலையில் இங்கிலாந்து அணி - ஜோ ரூட் அபாரம்!

ABOUT THE AUTHOR

...view details