தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் விளையாடிய அனுபவம் பெற்ற இரண்டே பாகிஸ்தான் வீரர்கள்.. கள நிலவரம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 11:07 AM IST

2023 Cricket World Cup: அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

2023 Cricket World Cup
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி - ஆர்வத்தோடு காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 நேற்று (அக் 05) தொடங்கியது. உலகக் கோப்பையை இந்தியா மட்டுமே நடத்துவது இதுவே முதல் முறை. அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதன் மூலம், உலகக் கோப்பை 2023 போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தைத் தொடங்குகிறது.

மறுபுறம், பாகிஸ்தான் அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் களமிறங்கி உள்ளது. இதனால் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தூதரக நெருக்கடி பிரச்னைகள் இருப்பதால் தொடர்ந்து இருதரப்பிலும் கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் இந்தியாவுக்கும் பரஸ்பர சுற்றுப்பயணம் செய்வதில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இதுபோன்ற சூழலில், ஷாகித் அப்ரிடி (Shahid Afridi) தலைமையிலான பாகிஸ்தான் அணி, கடைசியாக 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வந்தது. அப்படி வருகை தந்த அந்த அணியில் இடம் பெற்றிருந்த முகமது நவாஸ் (Mohammad Nawaz) உலகக் கோப்பை 2023 போட்டிக்கான தற்போதைய பாகிஸ்தான் அணியிலும் இடம் பெற்றுள்ளார். அந்த வகையில், முகமது நவாஸ் இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.

மேலும், உலகக் கோப்பை 2023 போட்டிக்கான தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு வீரரான சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) 2014ஆம் ஆண்டு இந்தியா வந்தார். ஆனால், அது பாகிஸ்தான் அணியில் அல்ல. மாறாக சாம்பியன்ஸ் லீக் டி-20 போட்டிக்காக இந்தியா வந்த லாகூர் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார், சல்மான் அலி ஆகா.

அப்போது பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டால்பின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சல்மான் அலி ஆகா விளையாடினார். தற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், முகமது நவாஸ், சல்மான் அலி ஆகா, இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம் ஜூனியர், ஷஹீன் ஷா அப்ரிடி, சவுத் ஷகீல், உஸ்மான் மிர், அப்துல்லா ஷபிக் ஆகியோரில் முகமது நவாஸ் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகிய இருவரையும் தவிர்த்து 13 வீரர்களுக்கும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இல்லை.

மேலும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ள காரணத்தினாலும், பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான வீரர்களுக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் இல்லாத காரணத்தினாலும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று (அக்.6) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நெதர்லாந்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தைப் பாகிஸ்தான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Asian Games Cricket : இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி! பாகிஸ்தானுடன் இறுதி கோதா?

ABOUT THE AUTHOR

...view details