தமிழ்நாடு

tamil nadu

PBKS vs LSG: குர்னால் அபாரம்; பஞ்சாபை கட்டுப்படுத்திய லக்னோ!

By

Published : Apr 30, 2022, 6:59 AM IST

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, 11 ரன்களை மட்டும் கொடுத்த குர்னால் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

PBKS vs LSG
PBKS vs LSG

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி புனே எம்சிஏ மைதானத்தில் நேற்று (ஏப். 29) நடைபெற்றது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் அணிக்கு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்டர் டி காக் 46 (37) ரன்களையும், தீபக் ஹூடா 34 (28) ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

போராடாத பேட்டர்கள்: தொடர்ந்து, 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஓரளவுக்கு ஆறுதலை தந்தது. கேப்டன் மயாங்க் அகர்வால் - ஷிகர் தவான் ஜோடி 35 ரன்களை எடுத்த நிலையில், அகர்வால் 25 (17) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின், டாப் ஆர்டர் பேட்டர்களான தவான், ராஜபக்சே, லியம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பேர்ஸ்டோவ் மட்டும் 28 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தார்.

இருப்பினும், பின்வரிசையில் ரிஷி தவானை தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்காததால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

குர்னால் அசத்தல்: லக்னோ பந்துவீச்சில் குர்னால் பாண்டியா 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, 11 ரன்களை மட்டும் கொடுத்து அசத்தினார். மேலும், மோஷின் கான் 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக குர்னால் தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளிகள் பட்டியலில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி) 3ஆவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 5 தோல்வி) 7ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 154 ரன்கள் இலக்கு

ABOUT THE AUTHOR

...view details