தமிழ்நாடு

tamil nadu

DC vs KKR: குல்தீப் சுழலிலும், பாவெல் பவரிலும் வென்றது டெல்லி

By

Published : Apr 29, 2022, 8:07 AM IST

ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

DC vs KKR HIGHLIGHTS
DC vs KKR HIGHLIGHTS

மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடரில் 41ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று (ஏப். 28) மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், கொல்கத்தா அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

8 பந்துவீச்சாளர்கள்: எளிதான இலக்கு என்றாலும் டெல்லி அணி, தொடக்கத்திலும், மிடில் ஓவர்களிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது. மேலும், டெல்லி அணிக்கு அழுத்தம் அளிக்கும் வகையில் கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மொத்தம் 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். இருப்பினும், ரோவ்மேன் பாவெல் அதிரடியில் டெல்லி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி அடைந்தது.

ராணா ஆறுதல்: பாவெல் 16 பந்துகளில் 3 சிக்சர், 1 பவுண்டரி உள்பட 33 ரன்களை எடுத்தார். மேலும், டேவிட் வார்னர் 42 (36) ரன்களில், அக்சர் படேல் 24 (17) ரன்கள் எடுத்தனர். கேகேஆர் பந்துவீச்சு தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கொல்கத்தா பேட்டிங்கில் நிதிஷ் ராணா 57 (34), ஷ்ரேயஸ் ஐயர் 42 (37) ரன்களை எடுத்து ஆறுதலான இலக்கிற்கு வழிவகுத்தனர்.

டெல்லி பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக விருதை தட்டிச் சென்றார். புள்ளிகள் பட்டியலில், டெல்லி அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 6ஆவது இடத்திலும், கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 6 தோல்வி) 8ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்...?

ABOUT THE AUTHOR

...view details