தமிழ்நாடு

tamil nadu

IPL 2022: லக்னோ ஹாட்ரிக் வெற்றி; டி காக் அதிரடியில் சிதறியது டெல்லி

By

Published : Apr 8, 2022, 7:30 AM IST

Updated : Apr 8, 2022, 8:58 AM IST

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில், லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக டி காக் தேர்வு செய்யப்பட்டார்.

IPL 2022
IPL 2022

நவி மும்பை:15ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று (ஏப். 7) நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

பிருத்வி ஆறுதல்:இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிருத்வி ஷா 61, கேப்டன் பந்த் 39, சர்ஃபராஸ் கான் 36 ரன்களை எடுத்தனர். லக்னோ அணி பந்துவீச்சு சார்பில் ரவி பீஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்பா கௌதம் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தில்லாக ஆடிய டி காக்: இதைத்தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு, ஓப்பனர்களான டி காக், கேப்டன் கே.எல். ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தபோது, ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எவின் லீவிஸ் 5 ரன்களுக்கு நடையைக்கட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த டி காக் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்களுக்கு குல்தீப் யாதவ்விடம் வீழ்ந்தார்.

பதானியின் ஃபினிஷிங் சிக்ஸர்: சற்றுநேரம் தாக்குபிடித்த தீபக் ஹூடா 11 ரன்களில் ஷர்துல் தாக்கூரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும், அடுத்துவந்த குர்னால் பாண்டியா, ஆயுஷ் பதானி கூட்டணி லக்னோ அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றது. மேலும், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் பதானி சிக்ஸர் அடித்து, லக்னோ அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, லக்னோ அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்தது.

புள்ளிப்பட்டியலில்...:குர்னால் 19 ரன்களுடனும், ஆயுஷ் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் குல்தீப் 2 விக்கெட்டுகளையும், லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக டி காக் தேர்வானார். புள்ளிப்பட்டியலில், லக்னோ 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 1 தோல்வி) 2ஆவது இடத்திலும், டெல்லி அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி, 2 தோல்வி) 7ஆவது இடத்திலும் உள்ளன.

Last Updated : Apr 8, 2022, 8:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details