தமிழ்நாடு

tamil nadu

IPL 2021: ஆர்சிபியை அடக்கி ஆறுதல் வெற்றிபெற்ற ஹைதராபாத்

By

Published : Oct 7, 2021, 6:16 AM IST

ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 ரன்களில் வீழ்த்தி ஹைதராபாத் வெற்றிபெற்றது.

ஆர்சிபியை அடக்கி ஆறுதல் வெற்றி பெற்ற ஹைதராபாத்
ஆர்சிபியை அடக்கி ஆறுதல் வெற்றி பெற்ற ஹைதராபாத்

அபுதாபி: ஐபிஎல் 2021 தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் மோதின.

அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நேற்று(அக். 6) நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

ஹைதராபாத் பேட்டிங்

அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள்‌ இழப்பிற்கு 141 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 44 (38) ரன்களையும், கேப்டன் வில்லியம்சன் 31 (29) ரன்களையும் எடுத்தனர்.

பெங்களூரு பந்துவீச்சுத் தரப்பில் ஹர்ஷல்‌ படேல் 3 விக்கெட்டுகளையும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கிளம்பினார் கோலி

இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணிக்குத் தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 5 (4) ரன்களிலும், கிறிஸ்டியன் 1 (4) ரன்களிலும், பாரத் 12 (10) ரன்களிலும்‌ குறிப்பிட்ட இடைவேளையில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த படிக்கல், மேக்ஸ்வெல் சற்று பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். படிக்கல் பொறுமையாகவும், மேக்ஸ்வெல் அதிரடியாகவும் ரன்களைச் சேர்த்தனர்.

பறிகொடுத்த பெங்களூரு

இருப்பினும், அரைசதம் கடப்பார்கள்‌ என்று எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 40 (25) ரன்களிலும், படிக்கல் 41 (52) ரன்களிலும் ஆட்டமிழக்க, பெங்களூரு ‌அணி மீது அழுத்தம் அதிகமாகியது.

கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் ஹோல்டர் வெறும் 5 ரன்களை மட்டும் கொடுத்து, ஒரு‌ விக்கெட் வீழ்த்தினார்.

கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள்‌ மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், நான்காவது பந்தை களத்தில் இருந்த டிவில்லியர்ஸ் சிக்சர் அடித்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார்.

புவியின் பவர்

ஆனால், சுதாரித்துக்கொண்ட புவனேஷ்வர்‌ அடுத்த இரண்டு பந்துகளில்‌ 1 ரன்னை மட்டும் கொடுத்து ஹைதராபாத் அணியை வெற்றிபெறச் செய்தார். ஆட்டநாயகனாக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறுதி கட்டத்தை நோக்கி

ஹைதராபாத் அணியின் இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில்‌ எந்த மாற்றமுமில்லை. ஹைதராபாத் 6 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதனால், முதஷ் குவாலிஃபயர் போட்டி டெல்லி, சென்னை அணிகளுக்கு‌ இடையே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி பஞ்சாப் அணி‌ உடனான இன்றைய போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, பெங்களூரு அணி நாளை (அக். 8) டெல்லி அணியுடனான லீக் போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் பெங்களூரு அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இன்றையப் போட்டிகள்

ஐபிஎல் தொடரில் இன்று (அக். 7) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பஞ்சாப், சென்னை அணிகள் மோதும் 53ஆவது லீக் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்குத் தொடங்கும்.

அடுத்து 7.30 மணிக்கு தொடங்கும் 54ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ABOUT THE AUTHOR

...view details