தமிழ்நாடு

tamil nadu

IPL 2021 PBKS vs SRH: இன்றைய போட்டியில் வெல்லப்போவது போவது யார்?

By

Published : Apr 21, 2021, 3:00 PM IST

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 7ஆவது இடத்திலும், ஹைதராபாத் அணி 8ஆவது இடத்திலும் உள்ளன. எனவே இரு அணிகளும் தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகின்றன.

ipl-2021-league-14-match-preview
ipl-2021-league-14-match-preview

சென்னை: 14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் இன்று (ஏப்.21) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியோ உலகத்தரத்திலான பேட்டிங் வரிசை வைத்திருந்தும், அந்த அணி இத்தொடரில் பெரிதாக சோப்பிக்கவில்லை. காரணம், அவர்களின் பந்துவீச்சு குளறுபடியாக இருப்பது தான்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 221 ரன்கள் குவித்தும், பஞ்சாப் அணி 217 ரன்களை விட்டுக்கொடுத்து திரில் வெற்றியை தான் பெற்றது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களே சொதப்பியதால் பஞ்சாப் பவுலர்கள் சென்னை அணியிடம் சரணாகதி அடைந்தார்கள். டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் 195 ரன்கள் குவித்து பஞ்சாப் அணி, பவுலிங்கால் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியோ விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது.

வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் ஆட்டமிழந்தால் பேட்டிங் வரிசையே காணாமல் போனது போல் தோன்றுகிறது. கடந்த போட்டிகளில் இலக்கை துரத்தும் போது சிறந்த ஃபினிஷர்கள் இல்லாமல் ஹைதராபாத் அணி தவித்து வருகிறது. மனீஷ் பாண்டேவின் பொறுப்பற்ற ஆட்டம் மிடில் ஆர்டரை பலமிழக்க வைத்துள்ளது. அப்துல் சமத், விஜய் சங்கர் ஆகியோர் மீதும் அணியின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை இத்தொடரில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் பஞ்சாப் அணி முதல் பேட்டிங்கே ஆடியுள்ளதுள்ளது. அதேபோல், ஹைதராபாத் அணியும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங்கே செய்துள்ளது. ஆதலால் வெற்றிக்கு டாஸ் பெரிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏழாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடமான எட்டாவது இடத்திலும் உள்ளன. ரன்ரேட் அடிப்படையிலும் ஹைதராபாத் மிகவும் பின்தங்கியுள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவனிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதி அடைந்து இன்றைய போட்டியில் விளையாடும்பட்சத்தில், ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்புள்ளது.

இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் 16 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 11 போட்டிகளில் ஹைதராபாத் அணியும், 5 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வென்றுள்ளன. இப்போட்டியிலும் பஞ்சாப் அணியின் மீதான தனது ஆதிக்கத்தை ஹைதராபாத் அணி தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: IPL 2021 DC vs MI: மும்பையை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

ABOUT THE AUTHOR

...view details