தமிழ்நாடு

tamil nadu

SRH Vs DC : தொடரும் டெல்லியின் சோகம்! சொந்த ஊரில் மண்ணை கவ்வியது!

By

Published : Apr 30, 2023, 6:58 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Ipl 2023
Ipl 2023

டெல்லி :16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 40வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அபிஷேக் சர்மாவும், மயங்க் அகர்வாலும் ஐதராபாத் அணியின் இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் சர்மா அடித்து ஆடிய நிலையில், மயங்க் அகர்வால் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் அபிஷேக் சர்மா நிலைத்து நின்று விளையாடி அணிக்கு ரன் சேகரிக்க மறுபுறம் சீட்டுக் கட்டு போல் ஐதராபாத் அணியின் விக்கெட் வீழ்ச்சி நடைபெற்றது.

ராகுல் திரிபாதி 10 ரன், கேப்டன் ஏய்டன் மார்க்ரம் 8 ரன், ஹேரி ப்ரூக் டக் அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினர். நிலைத்து நின்று அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா 67 ரன்கள் குவித்த நிலையில் அக்சர் படேல் பந்துவீச்சில் டெல்லி கேப்டன் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி வரிசையில் களமிறங்கினாலும் அணியின் தேவையை புரிந்து விளையாடிய ஹென்ரிச் கிளெஸ்சென் அடித்து ஆடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். அவருக்கு அப்துல் சமாத் (28 ரன்) உறுதுணையாக இருந்தார். 20 ஓவர்கள் முடிவி 6 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத் அணி 197 ரன்கள் குவித்தது.

கிளெஸ்சன் 53 ரன்களுடனும், அஹீல் ஹொசைன் 16 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்களும், இஷாந்த் சர்மா, அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். 198 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.

டெல்லி அணிக்கு தொடக்க மிக மோசமாக அமைந்தது. ரன் கணக்கை துவங்கும் முன்னரே அந்த அணி விக்கெட் கணக்கை துவக்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கி பிலிப் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் நிலைத்து நின்று விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.

ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய இந்த ஜோடி அவ்வப்போது சிக்சர்களையும் பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அரை சதம் கடந்த இந்த ஜோடியை மார்க் மார்கண்டே பிரித்தார். அவரது பந்துவீச்சில் 59 ரன்கள் குவித்த பிலிப் சால்ட் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

மீண்டும் டெல்லி அணி பழைய நிலைக்கு திரும்பியது. மணீஷ் பாண்டே 1 ரன், பிரியம் கார்க் 12 ரன், சர்பஸ் கான் 9 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். மறுபுறம் போராடிக் கொண்டு இருந்த மிட்செல் மார்ஷூம் 63 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அக்சர் படேல் 29 ரன்களுடனுன், ரிபல் படேல் 19 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். ஐதராபாத் வீரர் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டும் புவனேஸ்வர் குமார், அஹீல் ஹொசைன், நடராஜன், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர் தோல்வியால் டெல்லி அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது. 8 ஆட்டத்தில் விளையாடி உள்ள டெல்லி அணி 2 வெற்றி 6 தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க :KKR vs GT:விஜய் சங்கர் அதிரடி- 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details