தமிழ்நாடு

tamil nadu

RCB vs MI: ஹிட் மேன் - கிங் கோலி பலப்பரீட்சை; டாப் 4-க்குள் செல்லப்போவது யார்?

By

Published : May 9, 2023, 6:33 AM IST

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடைசியாக இரு அணிகளும் விளையாடிய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளதால், வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

மும்பை:நடப்பு சீசனில் 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன், 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 10 புள்ளிகளுடன் அந்த அணி 6ம் இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னையுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் ரன் குவிக்க தடுமாறுகிறார். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்காமல் 3வது வீரராக விளையாடினார். எனினும் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அதேவேளையில் இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் நேஹல் வதேராவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.

மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் கவனம் செலுத்துவது அவசியம். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆறுதல் தருகிறார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா பந்துவீச்சு எதிரணிக்கு சவாலாக இருக்கும். அவர் நடப்பு சீசனில் 17 விக்கெட்களை எடுத்துள்ளார். எனினும் பிற பந்துவீச்சாளர்கள் இன்னும் 10 விக்கெட்களை கூட எடுக்கவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பையை போலவே 10 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் அந்த அணி 5வது இடத்தில் உள்ளது. விராட் கோலி, கேப்டன் டுபிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பித்தான் பேட்டிங் உள்ளது. நடப்பு சீசனில் 511 ரன்களை குவித்து டுபிளெஸ்ஸி நம்பிக்கை தருகிறார். ஆனால் இந்த 3 விக்கெட்களையும் இழந்துவிட்டால் பேட்டிங் ஆட்டம் கண்டு விடும்.

டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் லோம்ரோர் 54 ரன்கள் விளாசி அணிக்கு வலுசேர்த்தார். தினேஷ் கார்த்திக் ஃபார்மை இழந்து தவிக்கிறார். பந்துவீச்சில் ஹேசில்வுட், முகமது சிராஜ் மிரட்டுகின்றனர். 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் கரண் சர்மா, ஹசரங்கா ஆகியோர் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார்கள் என நம்பலாம். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி டாப் 4க்குள் சென்று விடும் என்பதால், வெற்றிக்காக மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் போராடும் என எதிர்பார்க்கலாம்.

மும்பை vs பெங்களூரு

ஆட்டம் எங்கே?:இரு அணிகளும் மோதும் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மும்பை உத்தேச அணி:இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, ஸ்டப்ஸ், டிம் டேவிட், ஆகாஷ் மத்வால், பியூஷ் சாவ்லா, ஆர்ச்சர், அர்ஷத் கான்.

பெங்களூரு உத்தேச அணி: டுபிளெஸ்ஸி (கேப்டன்), விராட் கோலி, லோம்ரோர், மேக்ஸ்வெல், கேதார் ஜாதவ், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹேசில்வுட், சிராஜ், கரண் சர்மா.

ABOUT THE AUTHOR

...view details