தமிழ்நாடு

tamil nadu

நான் இன்னும் விட்டுப்போகவில்லையே - அடுத்த சீசன் குறித்து தோனி சூசகம்

By

Published : Oct 16, 2021, 1:19 PM IST

Updated : Oct 16, 2021, 1:38 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என உருவாக்கிய ஒரு தனிப் பாரம்பரியத்தை விட்டுச்செல்வது குறித்து நீங்கள் பெருமைப்படலாம் என்று நிகழ்ச்சி வர்ணனையாளர் கூறியதற்கு, நான் இன்னும் அணியை விட்டுப்போகவில்லையே எனக் கேப்டன் தோனி புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

தோனி
தோனி

துபாய்: ஐபிஎல் 2021 சீசனின் சாம்பியன்ஷிப் பட்டத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. 2010, 2011, 2018ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிஎஸ்கே கோப்பையைத் தட்டித்தூக்கியுள்ளது.

துபாய் பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.

சீறிய சிஎஸ்கே

இதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக டூ பிளேசிஸ் 86 ரன்களையும், மொயின் அலி 37 ரன்களையும் குவித்தனர். கேகேஆர் பந்துவீச்சில் நரேன் 2 விக்கெட்டுகளையும், மவி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, களமிறங்கிய கேகேஆர் அணிக்குத் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், கில் இருவரும் சிறப்பாக விளையாடி 10 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் நிலைத்து ஆடினர். முதல் விக்கெட்டாக வெங்கடேஷ் ஐயர் வெளியேறிய பிறகு அடுத்த ஐந்து ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து கேகேஆர் சிஎஸ்கேவிடம் சரணடைந்தது.

கேகேஆர் கெத்து - தோனி

ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சும், தீபக் சஹார், ஹசில்வுட் ஆகியோரது கட்டுக்கோப்பும் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக டூ பிளேசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருது ஹர்ஷல் படேலுக்கு வழங்கப்பட்டது.

மேலும், அதிக ரன்களைக் குவித்த பேட்டர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் நிறத் தொப்பியை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் (632 ரன்கள்), அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை ஹர்ஷல் படேலுக்கும் (32 விக்கெட்டுகள்) வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி பேசியதாவது, "முதலில் நான் கொல்கத்தா அணி குறித்துதான் பேசியாக வேண்டும். தொடர் தோல்விகளிலிருந்து இதுபோன்று மீண்டுவருவது என்பது மிகவும் கடினமானது. கோப்பை வெல்ல வேறு அணிகளைவிட, கேகேஆர் அணியே தகுதிவாய்ந்தது" என்றார்.

பிசிசிஐ கையில்தான் இருக்கு...

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிவீர்களா என்ற கேள்விக்கு, "முன்பே கூறியதுதான், அடுத்த தொடரில் நான் விளையாடுவது என்பது பிசிசிஐயின் கையில்தான் உள்ளது. இரண்டு அணிகள் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள நிலையில், சென்னை அணிக்கு எது நல்லதோ அதுகுறித்துதான் முடிவெடுக்கப்படும்.

அணியில் தக்கவைக்க வேண்டிய மூன்று, நான்கு வீரர்களில் நான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பலம்வாய்ந்த அணியை உருவாக்குவதே முக்கியம். முதன்மையான வீரர்களைத் தக்கவைப்பதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த அணியைக் கட்டமைக்க முடியும்" என்றார்.

'Still I haven't left Behind'

இதையடுத்து, நிகழ்ச்சித் தொகுப்பாளர், "நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என உருவாக்கிய ஒரு தனிப் பாரம்பரியத்தை விட்டுச்செல்வது குறித்து நீங்கள் பெருமைப்படலாம்" என்று கூறியதற்கு, சட்டென்று ஒரு புன்னகையுடன், "நான் இன்னும் அணியை விட்டுப்போகவில்லையே" எனக் கூறினார்.

மேலும், சென்னை அணி எங்கு விளையாடினாலும், தங்களுக்கு முழு ஆதரவளிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தோனி கூறினார். இந்தப் போட்டி, தோனி டி20 போட்டிகளில் கேப்டனாக விளையாடிய 300ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IPL 2021: 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி

Last Updated :Oct 16, 2021, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details