தமிழ்நாடு

tamil nadu

MSD THE FINISHER: சர்வதேச போட்டிகளில் இருந்துதான் ஓய்வு : ஃபினிஷிங்கில் இல்லை - மீண்டும் கலக்கிய தல தோனி!

By

Published : Apr 22, 2022, 10:32 AM IST

Updated : Apr 22, 2022, 10:48 AM IST

நேற்றைய போட்டியில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்று சொன்னால், அது தல தோனியின் மாஸ்டர்-கிளாஸ் ஃபெர்பாமன்ஸ்தான். சர்வதேச அரங்கில் இருந்து தோனி ஓய்வுபெற்ற பின், அவரின் மேட்ச் ஃபினிங்ஷிங்கை பார்க்க ரசிகர்கள் நீண்ட நாள்களாக ஏங்கி வந்தனர். அப்படி ஏங்கிக் கிடந்தவர்கள், நேற்றைய போட்டியைப் பார்க்காமல் தூங்க சென்று இருந்தால் அது அவர்களுக்கு பெரும் துரதிருஷ்டம்தான்.

MSD THE FINISHER
MSD THE FINISHER

15ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புள்ளிப்பட்டியலில் குஜராத், பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் முன்னிலை வகிக்கும் சூழலில், வழக்கமாக தொடரில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை வீழ்ந்து கிடக்கின்றன.

இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரலியாவில் டி20 உலக்கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், விராட் கோலி, ரோஹித் சர்மா, இஷான் கிஷன் என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் யாரும் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. இதனால், 2 புதிய அணிகள் உள்பட 10 அணிகளுடன் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடர், ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

ஏன் இந்த எதிர்பார்ப்பு: ஆனால், சென்னை - மும்பை அணிகள் ஆட்டம் என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு குஷி பிறந்துவிடும். இரு அணிகளையும் பரமவைரிகள் என்று ரசிகர்கள் பொதுப்படையாக கூறினாலும், டி20 கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தவிர்க்க முடியாத (டி20) அணிகள் என்பதால்தான் இந்த ஆரவாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு அணிகளும் மற்ற அணிகளுடன் விளையாடும்போது ஒரு விதமாகவும், தங்களுக்குள் மோதிக்கொள்ளும்போது வேறு விதமாகவும் ஆட்டத்தை அணுகி வருவதும் இதனால்தான்.

இந்நிலையில், தொடரின் 9ஆவது இடத்திற்கான போட்டியாக சென்னை - மும்பை அணிகள் நேற்று (ஏப். 21) மோதின. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, வழக்கம்போல் ரசிகர்களை கடைசி நொடி வரை பதற்றத்தில் வைத்திருந்தது. லாஸ்ட் பால் த்ரில்லர் போட்டியாக மாறிய நிலையில், சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மாஸ் காட்டியது.

சிஎஸ்கேவின் சிக்கல்: வெற்றி பெற்றது எல்லாம் சரி, ஆனால் சென்னை அணி பழைய ஃபார்மில் இருக்கிறதா என்ற கேள்வி மட்டும் தொடர்ந்துகொண்டே வருகிறது. நேற்றைய போட்டி உள்பட 7 போட்டிகளிலும் சரியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமையவில்லை. அதனால், பவர்பிளேயில் ரன் குவிப்பதில் பிரச்சனை; நிலையான வெளிநாட்டு வீரர்கள் இல்லை; பவர்பிளே பந்துவீச்சில் ஏதுவான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை போன்ற இத்தனை இல்லைகள் சிஎஸ்கேவின் சீரியஸ் சிக்கல்கள்.

நேற்றைய சொதப்பல்கள்: மேலும், நேற்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் தவறவிட்ட கேட்ச்கள். குறிப்பாக, கேப்டன் ஜடேஜா விட்ட 2 கேட்ச்கள். அதுமட்டுமில்லாமல் சான்ட்னர் வீசிய 2ஆவது ஓவரில் தோனி, சுர்யகுமாருக்கு எதிராக தவறவிட்ட எளிமையான ஸ்டம்பிங் வாய்ப்பு. இவை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஏக்கத்தை தீர்த்த தோனி: இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நேற்றைய போட்டியில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்று சொன்னால், அது தல தோனியின் மாஸ்டர்-கிளாஸ் ஃபெர்பாமன்ஸ்தான். சர்வதேச அரங்கில் இருந்து தோனி ஓய்வுபெற்ற பின், அவரின் மேட்ச் ஃபினிங்ஷிங்கை பார்க்க ரசிகர்கள் நீண்ட நாள்களாக ஏங்கிவந்தனர். அப்படி ஏங்கிக் கிடந்தவர்கள், நேற்றைய போட்டியைப் பார்க்காமல் தூங்கிப் போயிருந்தால் அது பெரும் துரதிருஷ்டம்தான்.

பிரிட்டோரியஸ் அளித்த ஆறுதல்: கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. பிரிட்டோரியஸ், தோனி ஆகியோர் களத்தில் இருந்தனர். பும்ரா 19ஆவது ஓவரில் 11 ரன்களை மட்டும் கொடுத்து மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி சென்றார். பிரிட்டோரியஸ் எடுத்த இந்த 11 ரன்கள் மிக முக்கியமானது. கடைசி ஓவரை ஜெய்தேவ் உனத்கட் வீச வந்தார். லெஃப்ட் ஆர்ம் ஓவர் தி விக்கெட்டில் இருந்து வீசிய உனத்கட், முதல் பந்தில் விக்கெட்டையும், 2ஆம் பந்தில் சிங்கிளும் கொடுத்து சிஎஸ்கேவை பதற்றத்திற்கு ஆளாக்கினார்.

அந்த 4 பந்துகள்: ஆனால், அப்போது ஒரே ஆறுதல் தோனி ஸ்ட்ரைக்கில் நிற்பதுதான். 4 பந்துகளில் 16 ரன்கள் வேண்டும். தோனி இதுபோன்ற சுழ்நிலைகளில் பல போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருந்தாலும், இந்த போட்டியை வென்று கொடுப்பாரா என்ற சந்தேகமும் கூடவே இருந்தது.

மைதானத்தில் பார்வையாளர்களின் இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டிருக்க, அந்த 3ஆவது பந்தை உனத்கட் வீசினார். 5ஆவது ஸ்டம்ப் லைனில், ஸ்லாட்டில் வீசிய அந்த மெதுவான பந்தை, தோனி நேராக சிக்ஸருக்கு பறக்கவிட்டு மிரட்டினார். 3 பந்துகளில் 10 ரன்கள். இந்த முறை உனத்கட் ஸ்லோயர் பவுண்சருக்கு முயற்சி செய்தார். ஆனால், பேக்ஃபுட்டில் நிலையாக நின்ற தோனி, ஷார்ட் பைன் லெக் திசையில் தூக்கி அடித்து பவுண்டரியை பெற்றார்.

5ஆவது பந்தில் 2 ரன்களை எடுக்க, கடைசி டெலிவரியில் 4 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பிரிட்டோரியஸின் விக்கெட்டை வீழ்த்திய யார்க்கரை உனத்கட் கடைசி பந்தில் முயற்சி செய்தார். லெக்-ஸ்டம்ப் லைனில் யார்கருக்கு வந்த அந்த பந்தை, பீல்டர்களின் இடைவெளிகளை கணித்து கேப்பில் பைன் -லெக் திசையில் பவுண்டரியை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்துவிட்டார்.

ஸ்டைலும் கூலும்: ஆட்டத்தை முடித்துவிட்டு வழக்கம்போல் பெரிதாக எந்தவித எக்ஸ்பிரஷனையும் காட்டாத தோனி, தனது பேட்டை மட்டும் சிறிது தூக்கி பார்வையாளர்களிடம் காட்டினார், அவ்வளவுதான். தொடர் தோல்வியால் துவண்டுபோன மஞ்சள் படைக்கு, பெரிய படையலையே வைத்துவிட்டு பெவிலியனை பார்த்து நடக்க தொடங்கிவிட்டார்.

பொல்லார்டுக்கு வைத்த பொறி:இது தோனியின் ஃபினிஷிங் ஸ்டைல் என்றால், தோனி நேற்று பொல்லார்டிற்கு பீல்ட்- செட்டப் அமைத்து விக்கெட் எடுத்த வியூகமும் கவனம் பெற்றது. எப்படி, 2010 இறுதிப்போட்டியில், வித்தியாசமான பீல்ட் செட்டப் அமைத்து பொல்லார்டின் விக்கெட்டை எடுத்தாரோ அதேபோன்று நேற்று, பேட்ஸ்மேனுக்கு மிகவும் நேரான திசையில் தூபேவை நிற்க வைத்தார் தோனி. தீக்ஷானா வீசிய அந்த கேரம் - பால் டெலிவரியை பீல்டர் இருக்கிறார் என்று தெரிந்தும் பொல்லார்ட் நேராக அடித்து தோனியின் பொறியில் சிக்கினார்.

ட்விட்டரில் ஃபயர்:இப்படி நேற்றைய போட்டியில் தோனியின் ஒட்டுமொத்த ஆட்டம் பலருக்கும் குதூகலத்தை உண்டாக்கியது. சேவாக், முகமது கைஃப், மைக்கெல் வாகன், கெவின் பீட்டர்சன், ஆல்பி மார்க்கல், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், அமித் மிஸ்ரா ஆகியோரில் ட்விட்டரில் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

still haven’t left behind:போட்டி முடிந்து கேப்டன் ஜடேஜா, தொப்பியை கழட்டி தோனியை வணங்கும் புகைப்படம் இணையம் எங்கும் வைரலாகி வருகிறது. அதேபோல, ஜடேஜா வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவிடம் கூறும்போது, "அவர் இன்னும் இங்கே இருக்கிறார். அவரால் ஃபினிஷ் செய்ய முடியும் என்பதை மீண்டும் உலகிற்கு காட்டியிருக்கிறார்" என்றார். அதேதான், கடந்த சீசனில் இறுதிப்போட்டியை வென்ற பிறகு தோனி,"நான் இன்னும் விட்டுப்போகவில்லை (I still haven’t left behind). ஆம்... அவர் இன்னும் (என்றும்!) சிஎஸ்கேவை விட்டுப்போகவும் இல்லை, தனது பழைய ஸ்டைலை விட்டும் போகவில்லை.

இதையும் படிங்க: CSK vs MI: லாஸ்ட் பால் த்ரில்லர்- சிஎஸ்கே வெற்றி; 4 பந்துகளில் மும்பையை முடக்கிய தோனி!

Last Updated : Apr 22, 2022, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details