தமிழ்நாடு

tamil nadu

கிளைமேக்ஸை நெருங்கும் ஓவல் டெஸ்ட்; முன்னிலை பெறுமா கோலி & கோ?

By

Published : Sep 6, 2021, 7:45 PM IST

நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இந்திய அணி இன்னும் நான்கு விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிவருகிறது.

கிளைமேக்ஸை நெருங்கும் ஓவல் டெஸ்ட்
கிளைமேக்ஸை நெருங்கும் ஓவல் டெஸ்ட்

லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. இதனால், 1-1 என்ற கணக்கில் இத்தொடர் சமநிலைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயம்

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களைக் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 367 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய (செப். 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 32 ஓவர்கள் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், வெற்றிக்கு 291 ரன்களே தேவைப்பட்டன. இந்நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீது 43 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 31 ரன்களுடனும் இன்றைய (செப். 6) ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் அரைசதம் நோக்கி சற்று நிதானமாக விளையாடினர்.

வீழ்ந்தது முதல் விக்கெட்

அப்போது, இரண்டாம் இன்னிங்ஸில் தனது முதல் ஓவரை ஷர்துல் தாக்கூர் வீச வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய பர்னஸ், டெஸ்ட் போட்டிகளில் தனது 11ஆவது அரை சதத்தைப் பதிவுசெய்தார். அதற்கு அடுத்த நான்காவது பந்தில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய மலான், வழக்கத்திற்கு மாறாக மிகவும் பொறுமைக் காட்டினார். ஆனால், துரதிருஷ்டவசமாக 5 (33) ரன்களில் ரன்-அவுட்டாகி வெளியேறினார். ஆனால், மறுமுனையில் அரை சதம் கடந்த ஹமீத், கேப்டன் ரூட் உடன் இணைந்து தொடர்ந்து நிதானமாக விளையாடினார்.

இதன்மூலம், ஐந்தாம் நாள் மதிய உணவு இடைவேளைவரை (53 ஓவர்கள்), இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்திருந்தது. ஹமீத் 62 ரன்களுடனும், ஜோ ரூட் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், கடைசி நாளின் இரண்டாம் செஷன் தொடங்கிய சற்று நேரத்திலேயே இங்கிலாந்தின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின.

பும்ரா 100

சிறப்பாக ஆடிவந்த ஹமீத் 63 ரன்களுக்கும், ஒலி போப் 2 ரன்களுக்கும், பேர்ஸ்டோவ், மொயின் அலி ஆகியோர் டக்-அவுட்டாகி வெளியேறினர். கேப்டன் ரூட் 18 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா, ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக, ஒலி போப் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், பும்ரா தனது 100ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இங்கிலாந்து அணி 72 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும், 50 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையிலும், இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்தால் என்ற நிலையிலும் தொடர்ந்து விளையாடிவருகின்றன.

இதையும் படிங்க: TOKYO PARALYMPICS: இந்தியாவுக்கு 19 பதக்கங்கள்; 24ஆவது இடம்!

ABOUT THE AUTHOR

...view details