தமிழ்நாடு

tamil nadu

ஆர்சிபியின் புதிய கேப்டன் - அறிவித்த கோலி!

By

Published : Mar 12, 2022, 6:12 PM IST

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்கா வீரர் ஃபாப் டூ பிளேசிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை விராட் கோலி ட்விட்டரில் காணொலி ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

Faf du Plessis to lead RCB in IPL
Faf du Plessis to lead RCB in IPL

15ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, மே 29ஆம் தேதி முடிகிறது. 4 பிளேஆஃப் உள்பட மொத்தம் 70 லீக் போட்டிகள் 65 நாள்களில் நடைபெறுகிறது.

இந்த முறை 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும், குரூப் பி-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

மும்பையில் போட்டிகள்

இந்தாண்டு மகாராஷ்டிராவில் உள்ள மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடக்கின்றன. மொத்தமாக மும்பையின் வான்கடே, டிஒய் பட்டில் மைதானங்களில் தலா 20 ஆட்டங்களும், மும்பையின் பிராபோர்ன், புனேவின் எம்சிஏ மைதானங்களில் தலா 15 ஆட்டங்களும் நடக்கின்றன.

10 அணிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த சீசனை முன்னிட்டு கடந்த மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வுசெய்த நிலையில், பல அணிகளுக்கு கேப்டன்களின் தேவையும் இருந்தது.

ஆர்சிபி அறிவிப்பு

அதில் முக்கியமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த 9 சீசன்களாக கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி, 2022 சீசன் முதல் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு அறிவித்திருந்தார். எனவே, ஆர்சிபி அணி மெகா ஏலத்தில் கேப்டன் மெட்டிரியல் வீரருக்கு வலைப்போட்டு தேடியது.

ஏலத்தில், ஆர்சிபி அணி ஃபாப் டூ பிளேசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்களை எடுத்திருந்தாலும், கோலி தனது முடிவை மாற்றி மீண்டும் கேப்டன் பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்துவந்தது.

இதையடுத்து, நீண்ட நாள்களாக கேப்டனை அறிவிக்கமால் இருந்த நிலையில், ஆர்சிபியின் புதிய கேப்டனை இன்று (மார்ச் 11) அறிவிப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்தது.

பெங்களூரு vs பஞ்சாப்

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காணொலியில், இந்த சீசனில் ஆர்சிபியின் கேப்டனாக டூ பிளேசிஸை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என கோலி தெரிவித்துள்ளார். மேலும், அவரின் தலைமையின்கீழ் விளையாட ஆவலாக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் மார்ச் 26ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் தொடங்குகிறது. பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வரும் மார்ச் 27ஆம் தேதி டிஒய் பாட்டீல் மைதானத்தில் சந்திக்கிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் போட்டிகள் 3:30 மணிக்கும், மாலை நேர போட்டிகள் இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: முதல் ஆட்டம் சென்னை vs கொல்கத்தா... முழு அட்டவணை...

ABOUT THE AUTHOR

...view details