தமிழ்நாடு

tamil nadu

கோப்பையை கைப்பற்றுமா மகளிர் அணி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

By

Published : Mar 8, 2020, 11:58 AM IST

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு கடந்த வந்த பாதையைப் பற்றி பார்ப்போம்.

Women's T20 WC: As Women in Blue aim for glory, let's have a look at India's Road to Final
Women's T20 WC: As Women in Blue aim for glory, let's have a look at India's Road to Final

சர்வதேச மகளிர் தினமான இன்று, மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதில், முதல் முறை இறுதிச் சுற்றுக்குள் கால்பதித்த இந்திய அணி, ஆறு முறை இறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ள ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக எதிர்பார்ப்பு:

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியைக் காண இதுவரை, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. இதன்மூலம், ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக மகளிர் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. இந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் இறுதிச் சுற்றுக்கு கடந்த வந்த பாதையைப் பற்றி பார்க்கலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே, குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த உலகக்கோப்பை வெல்ல ஃபெவரைட்ஸ் அணியாக திகழும் ஆஸ்திரேலியாவை, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதன்பின் இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மட்டுமில்லாமல், குரூப் ஏ பிரிவில் எட்டு புள்ளிகளுடன் முதலிடமும் பிடித்தது. இதைத்தொடர்ந்து, சிட்னியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த அரையிறுதி போட்டி ஒருபந்துகூட வீசாமல் ரத்தான நிலையில், குரூப் பிரிகளில் அதிக வெற்றிகளை பெற்றதால், அதன் அடிப்படையில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குள் முதல்முறையாக கால்பதித்துள்ளது.

மெல்போர்ன் மைதானம்

இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் அதிரடி பேட்டிங்கும், பூனம் யாதவின் மிரட்டல் சுழற்பந்துவீச்சும்தான். 16 வயதான ஷஃபாலி வர்மா, இந்த தொடரின் நான்கு போட்டிகளில் 161 ரன்களை குவித்து, இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்துள்ளார்.

ஷஃபாலி வர்மா

பொறுப்புடன் விளையாடுவது அவசியம்:

எனினும் இந்திய அணி குரூப் போட்டிகளில் ஒருமுறைக்கூட 150க்கும் மேல் ரன்களை அடிக்கவில்லை. இதனால், இன்றைய இறுதி போட்டியிலும் ஷஃபாலி வர்மா சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஒருவேளை அவர் இன்று சொதப்பினாலும், அணியில் உள்ள அனுபவ வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் ஃபார்முக்கு வர வேண்டியது மிகவும் அவசியம்.

இந்திய அணி

அதேபோல மிடில் ஆர்டர் பிரிவிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொறுப்புடன் விளையாடினால் இந்திய அணி நிச்சயம் நல்ல ஸ்கோரை குவிக்கும். பந்துவீச்சு துறையில், தனது துல்லியமான சுழற்பந்துவீச்சின் மூலம் எதிரணிகளுக்கு அழுத்தம் தருகிறார் பூனம் யாதவ்.

குறிப்பாக, இந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற செய்தார். நான்கு போட்டிகளில், அவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, ராதா யாதவ் ஆகியோர் செயல்படுகின்றனர். குறிப்பாக, இந்தத் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பினாலும், இவர்களது அபாரமான பந்துவீச்சினாலேயே இந்திய அணி வெற்றிபெற்றது.

பூனம் யாதவ்

முன்னதாக, இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. இதனால், அதற்குத் தக்க பதிலடி கொடுத்து ஆஸ்திரேலிய அணி, தனது சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் என, அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 1983இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடரிலும், 2007இல் டி20 உலகக்கோப்பை தொடரிலும், இந்திய அணி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாம்பியன் பட்டங்களை வென்றது. அதே போல், ஒரு மேஜிக்கை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும் நிகழ்த்துமா? என்பதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், கனவாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க:மகளிர் டி20 இறுதிப் போட்டிகளும் ஆஸி.யின் ஆதிக்கமும்...!

ABOUT THE AUTHOR

...view details