தமிழ்நாடு

tamil nadu

முதல் டெஸ்ட்: அணியைக் காப்பாற்ற போராடும் ரகானே!

By

Published : Feb 23, 2020, 2:02 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் பின்தங்கியுள்ளது.

nz vs ind
nz vs ind

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்த 51 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது பும்ரா வீசிய முதல் பந்திலேயே வாட்லிங் (14) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கிராண்ட்ஹோம் 43, சவுத்தி 6 என அடுத்தடுத்து வெளியேறினர். இருப்பினும், பந்துவீச்சில் அசத்திய அறிமுக வீரர் கைல் ஜேமிசன் பேட்டிங்கிலும் மிரட்டினார். அவர் 45 பந்துகளில் நான்கு சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 44 ரன்கள் எடுத்த அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

கைல் ஜேமிசன்

இறுதிக்கட்டத்தில் அதிரடி காண்பித்த போல்ட் 38 (28 பந்துகள், ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்கள் அடித்து வெளியேறினார். இதையடுத்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அதிக பட்சமாக இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளையும் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் பந்தில் விக்கெட் எடுத்த பும்ரா

இதைத் தொடர்ந்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மயாங்க் - புஜாரா இணை நிதானமாக விளையாடியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயாங்க் அரைசதம் அடித்தார். மறுமுனையில் மிகவும் பொறுமையாக விளையாடிய புஜாரா 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

புஜாரா

அதன்பின் மயாங்க் 58 ரன்கள், கேப்டன் கோலி 19 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் மீண்டும் இந்திய அணி லேசான சரிவைச் சந்தித்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அஜிங்கியோ ரகானே - ஹனுமா விஹாரி ஆகியோர் நியூசிலாந்து பவுலர்களை கவனமாகக் கையாண்டு விக்கெட் இழப்பிற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்து 39 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரகானே 25 ரன்களுடனும் விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட் மூன்று விக்கெட்டுகளையும் சவுத்தி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையும் படிங்க: அதிரடி ஆல்ரவுண்டருக்கு பாகிஸ்தான் குடியுரிமை; உற்சாகத்தில் பாக். ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details