தமிழ்நாடு

tamil nadu

பெயர் மாற்றமா இல்லை உருமாற்றமா? பஞ்சாப் கிங்ஸ் ஒரு அலசல்

By

Published : Apr 8, 2021, 4:37 PM IST

பஞ்சாப் அணியின் கேப்டனும், கடந்த ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப் வீரருமான கே.எல்.ராகுல் தாமதாக அணியை முன்னேற்றியிருந்தாலும், தரமான அணியாக அதனை மாற்றியிருந்தார்.

Punjab Kings, IPL 2021, IPL 14, IPL, KL Rahul, பஞ்சாப் கிங்ஸ், ஐபிஎல் 14, ஐபிஎல் 2021, கே.எல்.ராகுல்
பெயர் மாற்றமா இல்லை உருமாற்றமா? : பஞ்சாப் கிங்ஸ் ஒரு அலசல்

வரும் 14ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி, புதிய பெயரோடு களம் காண்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றி, அவர்களின் பழைய தூசுகளையெல்லாம் களைந்து எறிந்துவிட்டு உற்சாகமாக இந்தத் தொடரை சந்திக்க உள்ளனர்.

2014ஆம் ஆண்டு ஐபிஎல்லில் இறுதிப் போட்டிக்குச் சென்று மிரட்டிய அணி, அதன்பின் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவே திணறி வந்தது. கடந்த சீசனில் ஆரம்பக்கட்டப் போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும், கடைசி ஐந்து போட்டிகளிலும் வெற்றிவாகை சூடி பிளே-ஆஃப் கனவை நூலிழையில் இழந்தது.

பஞ்சாப் அணியின் கேப்டனும், கடந்த ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப் வீரருமான கே.எல்.ராகுல் தாமதாக அணியை முன்னேற்றியிருந்தாலும், தரமான அணியாக அதனை மாற்றியிருந்தார்.

சொதப்பும் மிடில் ஆர்டர்

கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வாலின் தொடக்கமானது கடந்த தொடரில் அட்டகாசமாக அமைந்தது. அவ்வளவு வலுவான தொடக்கம் இருந்தும், மிடில்-ஆர்டர் வீரர்களால் அணியின் ஸ்கோரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.

அணியின் நங்கூரமாக இருந்த மேக்ஸ்வெல், சென்ற தொடரில் பெரிய அளவில் சோபிக்காமல் போனது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கருண் நாயரும் சோதப்ப, இதனால் இம்முறை இருவரையும் அணியிலிருந்தே கழட்டிவிட்டுள்ளது அணி நிர்வாகம்.

கிறிஸ் கெயில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு ஆரம்பப் போட்டிகளில் விளையாடவில்லை‌. அவர் அணிக்குத் திரும்பிய பிறகே பஞ்சாப் சரிவிலிருந்து மீண்டது‌.

நிக்கோலஸ் பூரன், சந்தீப் சிங், தீபக் ஹூடா, சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் நடுவரிசையில் கைக்கொடுக்கும்பட்சத்தில் அணி பெரிய இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.

அணியின் புதுவரவுகள்

ஐபிஎல் ஏலத்தின் அசத்தல் ராணியான ப்ரீத்தி ஜிந்தா இம்முறை டி20 நம்பர் ஒன் பேட்ஸ்மேன் டேவிட் மாலனை 1.5 கோடி ரூபாய்க்கும், சையது முஷ்டாக் அலி தொடரில் அதிரடி காட்டிய தமிழ்நாட்டு வீரர் ஷாருக் கானை 5.5 கோடி ரூபாய்க்கும் எடுத்து ஆச்சரியப்படுத்தினார்‌. இவர்கள் இருவரும் அணியின் பேட்டிங்கில் பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜலாஜ் சக்சேனா ஆல்-ரவுண்டர்களுக்கான இடத்தைப் பூர்த்திச் செய்வார்கள்.

பலப்படுத்துமா பந்துவீச்சை

வேகப்பந்துவீச்சில் வீக்கமாக இருக்கும் அணியில் பஞ்சாப் தான் முதன்மையானது என்றே கூறலாம். ஏனென்றால் கடந்த தொடரில் பெரிய இலக்கை அடித்தாலும், எளிதாக எதிரணியினர் வெற்றிபெறும் அளவில் தான்‌ அவர்களின் பந்துவீச்சு இருந்தது. இந்த அவப்பெயரை போக்க ஜை ரிச்சர்ட்சனையும், ரிலே மெரிடித்தையும் அணியில் சேர்த்துள்ளது.

மேலும் பஞ்சாப் இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட் எடுக்கத் திணறிவரும் நிலையில், இந்த இருவரும்‌ ஜாம்பவானகளான முகமது சமி, கிறிஸ் ஜோர்டன் ஆகியோருக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றே கருதப்படுகிறது. இளம் வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கும், இஷான் பொரலும் இவர்களுக்குடன் அதிரடி காட்டலாம்.

முருகன் அஸ்வின், ரவி பிஷ்னாய், சவுரப் குமார் ஆகிய இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அனுபவமிக்க சுழற்பந்து வீரர் அணியில் இல்லாதது சற்று பின்னடைவுதான்.

பஞ்சாப் இந்தத் தொடரில் பல போட்டிகளை பெங்களூரில்தான் விளையாட இருக்கிறது என்பதால் அது அணியின் பவர்ஹிட்டர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

பெயரை மாற்றினால் கோப்பையை வெல்ல முடியாது என்பது அனைவரும் அறிந்ததே‌‌. ஆனால் மாற்றம் அவர்களின் அணுகுமுறையாக இருக்கும்பட்சத்தில் இம்முறை கோப்பையைத் தூக்குவதற்கு தகுதியானவர்கள் பஞ்சாப் கிங்ஸ் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், டேவிட் மாலன், தீபக் ஹூடா, மந்தீப் சிங், சர்ஃப்ராஸ் கான், ஷாருக் கான், நிக்கோலஸ் பூரன், இஷான் பொரல், முருகன் அஸ்வின், முகமது சமி, கிறிஸ் ஜோர்டன், ரவி ப்ரீஷ் பிரர், பிரப்சிம்ரன் சிங், தர்ஷன் நல்கண்டே, அர்ஷ்தீப் சிங், ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜலாஜ் சக்சேனா, உத்கர்ஷ் சிங், ஃபேபியன் ஆலன், சவுரப் குமார்.

இதையும் படிங்க:IPL 2021 : மீண்டெழுமா தோனியின் அதிரடிப்படை?

ABOUT THE AUTHOR

...view details