தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி: ஆலோசிக்கும் பிசிசிஐ

By

Published : Feb 17, 2021, 3:23 PM IST

வரவுள்ள ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

BCCI contemplating allowing fans in stadium for IPL: Ganguly
BCCI contemplating allowing fans in stadium for IPL: Ganguly

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 13ஆவது சீசன் முதலில் ஒத்திவைக்கப்பட்டு, பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்களின்றி நாடத்தப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இத்தொடருக்கான குறைந்த அளவிலான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து வரவுள்ள ஐபிஎல் தொடரிலும் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருவதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கங்குலி, நாளை ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெறவுள்ளது. இது ஒரு சிறிய ஏலம், ஆனால் அணிகள் செய்ய நிறைய வேலை இருக்கும் என்று நினைக்கிறேன். கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்தியது நம்பமுடியாததாக இருந்தது.

மேலும் அத்தொடர் கடந்த 12 ஆண்டுகளில் இருந்ததை விட, மிக அதிகமான மதிப்பீடுகளைப் பெற்றது. அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். வரவுள்ள ஐபிஎல் தொடருக்கு மீண்டும் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுகுறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

அதேசமயம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் முடிந்துவிட்டது. ஏனெனில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டூ பிளெசிஸ் ஓய்வு

ABOUT THE AUTHOR

...view details