தமிழ்நாடு

tamil nadu

Ashes2023: ஆஷஸ் தொடரை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து; ஜோ ரூட் அபார சதம்!

By

Published : Jun 17, 2023, 12:30 PM IST

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

Etv Bharat
Etv Bharat

பர்மிங்காம்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற உற்சாகத்தில் களமிறங்கியது. இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸ், ஆண்டர்சன், ரூட், டக்கெட் என அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கலந்த அணியாக களமிறங்கியது. கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் க்ராவ்லி பவுண்டரி அடித்தார். அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரிக்கள் தொடர்ந்து அடித்தனர். இங்கிலாந்து அணி வகுத்த திட்டமான ‘bazball' முறை தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தனர்.

ஹேசல்வுட் முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்த்த நிலையில் டக்கெட் (12) ஹேசல்வுட் பந்தில் அவுட்டானார். அடுத்த க்ராவ்லி, போப் ஜோடி பவுண்டரிகளாக அடிக்க ஸ்கோர் அதிகரித்தது. 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் லியான் சுழற்பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் போப் (31) அவுட்டானார். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் க்ராவ்லி 61 ரன்களுக்கு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் அதிரடியாக ஆடினார். போலண்ட், ஹெசல்வுட் வீசிய ஓவர்களில் பவுண்டரிகளாக அடித்தார். லியான் வீசிய இன்னிங்ஸின் 37வது ஓவரில் புருக்கின் பேடில் பட்டு பந்து எகிறியது. பேட்ஸ்மென், கீப்பர் பந்தை தேடிய நொடிப் பொழுதில் மீண்டும் பந்து புருக்கின் காலில் பட்டு ஸ்டம்பில் விழுந்தது. புரூக் (32) மிகவும் துரதிர்ஷ்டமான முறையில் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்டோக்ஸ் (1) வந்த வேகத்தில் அவுட்டானார். பின்னர் ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி வேகமாக ரன்கள் சேர்த்தது. இன்கிலாந்து பேட்ஸ்மென்கள் இருவரும் போலண்ட், லியான் பந்துகளை பவுண்டரிகளாக விளாசினர். லியான் வீசிய இன்னிங்ஸின் 49வது ஓவரில் ரூட்டுக்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அம்பயர் ரிவியூ கேட்டு ரூட் தப்பித்தார்.

ஹெசல்வுட் வீசிய 60வது ஓவரில் பேர்ஸ்டோவ் கொடுத்த கேட்சை கேரி தவறவிட்டார். ஆனால், அடுத்த ஓவரிலேயே பேர்ஸ்டோவ் (78) ரன்களுக்கு ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். 6வது விக்கெட்டுக்கு ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி 121 ரன்கள் சேர்த்தது. அடுத்த களமிறங்கிய மோயின் அலி வந்த வேகத்தில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் அது வெகு நேரம் நிலைக்கவில்லை. 18 ரன்களுக்கு லியான் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய பிராட் ரூட்டுக்கு 1,2 ரன்கள் எடுத்து கம்பெனி கொடுக்க ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் தனது 30வது சதத்தைப் பதிவு செய்தார். இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் இந்த டிக்ளேர் முடிவு கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்டத்தில் நல்ல செட்டான பேட்ஸ்மென் ரூட் இருக்கும் பட்சத்தில் இன்னும் 50 ரன்கள் எடுத்திருக்க வாய்ப்புண்டு என்பது ரசிகர்களின் கணிப்பாகும். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது.

இதையும் படிங்க: Ashes 2023: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் அனல் பறக்கும் ஆஷஸ் யுத்தம் தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details