தமிழ்நாடு

tamil nadu

Ashes2023: விறுவிறுப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா வெற்றி பெற கடைசி நாளில் 174 ரன்கள் தேவை!

By

Published : Jun 20, 2023, 7:56 AM IST

ஆஸ்திரேலியா வெற்றிக்கு 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் 107 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து விளையாடி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

பர்மிங்காம்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் தொடரில் விளையாகிறது. முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் சதத்துடன் இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் ஒரு பக்கம் கவாஜா அதிரடியாக தொடங்க மறுபக்கம் வார்னர் 9 ரன்களுக்கு பிராட் பந்தில் போல்டானார். பின்னர் களமிறங்கிய லம்பூஷேனே முதல் பந்திலேயே டக் அவுட்டாக ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் ஆட்டம் கண்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதித்த ஸ்மித், ஸ்டோக்ஸ் பந்தில் 16 ரன்களுக்கு அவுட்டானார்.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய ஹெட் அதிரடியாக ஆடி அணியை மீட்டார். ஹெட் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த க்ரீன் (38) அலெக்ஸ் கேரிச்(66) நல்ல அடித்தளம் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் பொறுமையாக விளையாடிய கவாஜா (141) சதம் அடித்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் பிராட், ராபின்சன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்திற்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கல்லி திசையில் டக்கெட் அடித்த பந்தை கிரீன் அற்புதமாகப் பிடித்தார். இவரைத் தொடர்ந்து க்ராலி (7) அவுட்டாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் அனுபவமின்மை வெளிப்பட்டது. அடுத்து களமிறங்கிய ரூட் அதிரடியாக ஆடினார்.

மறுதிசையில் கேப்டன் கம்மின்ஸ் வீசிய அற்புதமான இன்ஸ்விங் யார்க்கரில் போப்(14) ரன்களுக்கு அவுட்டானார். 46 ரன்கள் சேர்த்த ரூட் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு லியான் பந்தில் 46 ரன்களுக்கு அவுட்டானார். ஹாரி புரூக்கும் 46 ரன்களுக்கு அவுட்டானார்.

அடுத்து பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த அதிரடியாக ஆட முயற்சித்தது. ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போட்ட லியான் பேர்ஸ்டோவை 20 ரன்களுக்கு அவுட்டாக்கினார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி (19), ராபின்சன் (27) ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முயற்சிக்க, அதற்கு ஆஸ்திரேலியா பவுலர்கள் வாய்ப்பளிக்கவில்லை. இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். வார்னர், கவாஜா ஆகியோர் பவுண்டரிகளாக அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 36 ரன்களுக்கு அவுட்டானார். லம்பூஷேனே 13 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

ஸ்டிவ் ஸ்மித் 6 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியா அணி 4 நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கடைசி நாளில் வெற்றிக்கு 174 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் ஆஸ்திரேலியா கைவசம் 7 விக்கெட் உள்ளது. ஆஸ்திரேலியா எளிதாக வெல்லுமா அல்லது இங்கிலாந்து பவுலர்கள் சாதிப்பார்களா என விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பிரீமியர் லீக்:திண்டுக்கல் டிராகன்ஸின் அபாரமான பந்துவீச்சில் சுருண்டது சீகம் மதுரை பேந்தர்ஸ்

ABOUT THE AUTHOR

...view details