தமிழ்நாடு

tamil nadu

தமிழ் சினிமாவின் 'பேராண்மை' எஸ்.பி  ஜனநாதன்

By

Published : Mar 14, 2021, 4:08 PM IST

சினிமா, சமூகத்தின் சமத்துவம், பொதுவுடமை சித்தாந்தத்தை தன்னுடைய அடையாளமாக வைத்துக்கொண்டார். அவரது வெற்றிடம் பொதுவுடைமை சிந்தனையை கோலிவுட்டுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

பொதுவுடமை இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் ஓர் 'பேராண்மை'
பொதுவுடமை இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் ஓர் 'பேராண்மை'

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். கடைசியாக, இவர் விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகளில் தீவிரமாகப் பணிபுரிந்துவந்த அவர், கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர், மீண்டும் எடிட்டிங் பணிக்கு திரும்பவில்லை. உடனே அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.


உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனையில், அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவுடைமை இயக்குநர் ஜனா:

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயக்குநராக வேண்டும் என்ற ஆசையுடன் பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா, கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான முதல் படம் 'இயற்கை'. இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது.

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன்.

இவை அனைத்துமே புரட்சிகர கருத்துகளை உள்ளடக்கியவை. இந்தப் படங்கள் போக தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாண் இயக்கத்தில் வெளியான 'பூலோகம்' படத்துக்கு வசனங்கள் எழுதியுள்ளார். இவர் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. படங்கள் இயக்கியது மட்டுமன்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர் ஆவார். இயக்குநர் சங்கத்துக்கு பல்வேறு விஷயங்களை முன்னெடுத்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. எஸ்.பி.ஜனநாதனின் மறைவு தமிழ்த் திரையுலகினருக்கு பேரிழப்பு.

ABOUT THE AUTHOR

...view details