தமிழ்நாடு

tamil nadu

’விரைவில் இயக்குநராவேன்' - யுவன் சங்கர் ராஜா

By

Published : Mar 1, 2022, 10:39 PM IST

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இசைப் பயணத்தை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பல சுவாரஸ்யத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

yuvan sankar raja press meet at chennai
யுவன் சங்கர் ராஜா

சென்னை: 1997ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தனது 16ஆவது வயதில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அறிமுகமானார். இசைப்பயணத்தில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “என்னோடு இணைந்து பணி செய்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எனது இசைக் குழுவினர், பாடகர்கள், பாடலாசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வில் இசைதான் எனக்கு முதன்மையானது. நிறைய ஆல்பம் பாடல்களை இசைத்து வருகிறேன். என்னுடன் இப்போது உள்ள அணியினர் தீவிரமாக உழைப்பவர்கள்.

யுவன் சங்கர் ராஜா செய்தியாளர் சந்திப்பு

நா. மு. இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

எனக்கு வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் 25 ஆண்டுகள் மிக விரைவாக சென்றுவிட்டது. இப்போதும் புதிதாக பயணத்தை தொடங்குவது போலவே உள்ளது. என்னைப் பொறுத்தவரை, நா. முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நாங்கள் அமைத்த பல பாடல்கள் வெற்றிப் பாடல்கள்தான்.

பல இசையமைப்பாளர்களுக்கு வெற்றி பாடல்களை கொடுத்தவர் முத்துக்குமார். பாடலாசிரியர்களில் பா. விஜய், சிநேகன், வைரமுத்து, விவேக் என பலருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நடிப்பைக் காட்டிலும் எனக்கு பல வேலைகள் இருப்பதால் நடிப்பதில் ஆர்வம் இல்லை. 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறியவுடன் அவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டதா என தந்தை இளையராஜா ஆச்சரியத்துடன் கேட்டார்.

யுவன் சங்கர் ராஜா

நான் இசையமைக்க தொடங்கிய புதிதில் ஒருமுறை சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் எனது அம்மாவை பார்த்து யுவனின் அம்மா செல்கின்றார் என சிலர் கூறினர். அதை என்னால் இப்போதும் மறக்க முடியாது. நிறைய பேரிடம் சென்று சேர்ந்துள்ளோம் என அப்போதுதான் நம்பிக்கை வந்தது. அம்மா என் உடன் இருப்பது போலவே உணர்கிறேன். என் மனைவியும், மகளும்தான் அம்மாவின் இடத்தை நிரப்பியுள்ளனர்.

விருதுகள் கிடைக்கவில்லை என வருத்தம் இல்லை

நான் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை. மனைவிதான் டிரெண்ட் ஆகும் விஷயங்களை பற்றி கூறுவார். எனக்கு கிடைக்கும் படங்களில் நன்றாக வேலை செய்வேன். எஸ்.பி.பியை இழந்தது பெரிய வருத்தம். லதா மங்கேஸ்வர் உடன் பணி செய்ய ஆசைப்பட்டேன்; ஆனால் முடியவில்லை.

யுவன் சங்கர் ராஜா

முக்கிய விருதுகள் எனக்கு கிடைக்கவில்லை என வருத்தம் இல்லை. பயணங்களின்போது அப்பா இளையராஜாவின் பாடல்களை கேட்பேன். கல்லூரி படிக்கவே இல்லை. பள்ளிக்கும் சரியாக செல்லவில்லை. நடிகர் விஜய் மகன் 'யுவனிசம்' என எழுதிய டி-சர்ட் அணிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜயே ’எனது மகன் உங்கள் வெறியன்’ என என்னிடம் நேரில் கூறினார். இந்த தலைமுறையும் என்னை ரசிப்பது இதன் மூலம் புரிகிறது. ரகுமானிடம் நீங்கள் பிரோகிராம் செய்த பாடல் பிடிக்கும் என்று கூறியிருக்கிறேன்.

எனக்கு இந்தி தெரியாது

எனக்கு இந்தி தெரியாது, எனவே தான் ’இந்தி தெரியாது போடா’ என டிசர்ட் அணிந்தேன். யாரையும் வருத்தப்படுத்த அவ்வாறு கூறவில்லை. எனக்கு இந்தி தெரியாது என்பதாலே அப்படி கூறினேன். நான் இசையமைக்க தொடங்கிய நாளில் ஒரே கீ-போர்ட் தான் என்னிடம் இருந்தது. அதில் ஒயர் கூட இல்லை. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பாடகர்களுக்கு குறுஞ்செய்தியில் ட்யூன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் பாடலை பாடி அனுப்பி விடுகின்றனர்.

எல்லா இசையமைப்பாளர்களும் வாழ்க்கையில் ஒரு இடத்தில் ஆன்மீகம் குறித்து யோசிப்பார்கள். தனது பழைய இசையை அவர்கள் மீண்டும் கேட்கும்போது இறைவன்தான் அதை கொடுத்தார் என அவர்களுக்கு தோன்றும். எனது அம்மாவின் இழப்புதான் கடவுள் நம்பிக்கை, கடவுள் குறித்த தேடல் எனக்குள் ஏற்பட முக்கிய காரணம்.

மனைவியிடம் கெஞ்சினேன்

முன்பெல்லாம் பயணங்களில் தேநீர் கடையில் நம் பாடல் ஒலித்தால் நன்றாக ஓடிவிட்டதாக நினைத்துக் கொள்வோம். ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. பெண் கதாபாத்திரம் முதன்மையானதாக அந்த படம் இருக்கும். 'காதல் ஆசை யாரை விட்டது' பாடலை உருவாக்கியவுடன் மனைவி மீதான காதலால் என்னை அறியாமல் மனைவிக்கு உடனே அனுப்பி விட்டேன். பின்பு யாருக்கும் அனுப்பிவிடாதே என்று கெஞ்சினேன்.

செல்வா, வெங்கட் பிரபுவுடன் பணி செய்வது மகிழ்ச்சியாக இருக்கும். இளையராஜா இசையில் பாடும்போது அவர் இல்லாத நேரத்திலேயே பாடினேன்” என்று யுவன் கூறினார். பின்னர், செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால் புதுப்பேட்டை திரைப்படத்திலிருந்து ‘ஒரு நாளில்' பாடலை யுவன் பாடிக் காட்டினார்.

நிறைவாக ’நான் தேடும் செவ்வந்தி பூவிது' என்ற இளையராஜா பாடலை பாடி செய்தியாளர் சந்திப்பை யுவன் நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: வலிமையான வசூல் - திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details