தமிழ்நாடு

tamil nadu

மீண்டு வந்த எக்ஸ்! திடீர் முடக்கத்திற்கு என்ன காரணம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 12:31 PM IST

Updated : Dec 21, 2023, 2:08 PM IST

X / Twitter down : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் திடீரென திடீரென முடங்கியதால் அதன் பயனர்கள் மேற்கொண்டு புதிய பதிவுகள் பதிவிட முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

எக்ஸ் முடக்கம்
X Down

சான் பிரான்சிஸ்கோ :பிரபல சமூக வலைதளமான எக்ஸ் திடீரென முடங்கியதால் அதன் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். இன்று (டிச. 21) காலை 11 மணி முதல் எக்ஸ் வலைதளம் முடங்கியது. திடீர் முடக்கத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக முடங்கி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செல்போன் செயலி மற்றும் இணையதளம் என இரண்டிலும் எக்ஸ் பக்கத்தை பயனர் அணுக முயற்சிக்கும் போது ‘Welcome to your timeline’ என காணப்படுகிறது. மேலும், முந்தைய பதிவுகள் அனைத்தும் மாயமான நிலையில், என்ன காரணம் என தெரியததால் பயனர்கள் கடும் குழப்பத்திற்குள்ளாகினர். ஏறத்தாழ 45 நிமிடங்கள் முடங்கிய பின்னர் எக்ஸ் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இதனால் பயனர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்த திடீர் எக்ஸ் முடக்கம் முதல் முறையா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. நடப்பு ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 3வது முறையாக எக்ஸ் பக்கம் முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எக்ஸ் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் நடப்பாண்டில் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் எக்ஸ் பக்கம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் எக்ஸ் நிறுவனம் கடுமையாக முடங்கி பயனர்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை உருவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கடந்த மார்ச் 6ஆம் தேதி சில மணி நேரங்களுக்கு எக்ஸ் முடங்கியதால் பயனர்கள் மேற்கொண்டு புது பதிவு உள்ளிட்ட எதையும் பகிர முடியாமல் தவித்தனர்.

கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அதுமுதலே ட்விட்டரில் அவர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் பெற பயனர்கள் 8 டாலர் சந்தா செலுத்த வேண்டும், நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட் போட மற்றும் மற்றவர்களின் ட்வீட்டுகளை பார்க்க முடியும் என பல்வேறு கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் ட்விட்டரை, எக்ஸ் வலைதளம் என எலான் மஸ்க் பெயர் மாற்றம் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தின் லோகோ உள்ளிட்ட அனைத்தையும் மாற்றி புது வடிவம் கொடுத்தார்.

இதையும் படிங்க :அடிக்கடி செந்நிறமாக மாறும் புதுச்சேரி கடல்நீர்.. நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு!

Last Updated : Dec 21, 2023, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details