தமிழ்நாடு

tamil nadu

லைக் செய்யுங்க...சப்ஸ்கிரைப் செய்யுங்க...! கோடிக்கணக்கில் நூதன மோசடி!

By

Published : Dec 18, 2020, 8:40 AM IST

சென்னை: ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்பில் லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி அரங்கேறியுள்ளது.

fraud
fraud

ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்-களில் அதிக லைக்குகளையும், சப்ஸ்கிரைபர்களையும் கொண்டுள்ளவர்களுக்கு, யூடியூப் நிறுவனமே டாலர்களில் பணம் கொடுக்கிறது. அதேபோன்று பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் நடுவே விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதிக்கலாம். அதேநேரம் ஒரு வீடியோவுக்கு லைக் மற்றும் சப்ஸ்கிரைப் என்பதை மக்கள் அவ்வளவு எளிதில் அளித்துவிட மாட்டார்கள்.

ஆனால், அந்த லைக் மற்றும் சப்ஸ்கிரைப்பை அடிப்படையாக வைத்தே ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் கூறி, மீ ஷேர் (me share) மற்றும் லைக் ஷேர் (like share) என்ற பெயரில் செயலியை உருவாக்கி மோசடி நடந்துள்ளது. இந்த செயலிகளை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்க முடியாது. தனி லிங்குகள் மூலம்தான் பதிவிறக்க முடியும்.

மீ ஷேரில் இலவசமாக 3 யூடியுப் வீடியோக்களையோ அல்லது ஃபேஸ் புக் வீடியோக்களையோ லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்தால், ஒரு லைக் மற்றும் சப்ஸ்கிரைப்பிற்கு 8 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த பணமானது அந்த செயலியில் பணம் சேமித்து வைக்க உள்ள வாலட்டில் சேரும். மேலும் அதிகம் சம்பாதிக்க அப்டேட், ஏங்கர், இன்டர்நெட் செலிபிரிட்டி, ஆஸ்கர், கிங் என்ற பெயரில் பல திட்டங்கள் உள்ளன. இதில் சேர 1,000 ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை செயலிக்கு பணம் செலுத்த வேண்டும்.

லைக் செய்யுங்க...சப்ஸ்கிரைப் செய்யுங்க...! கோடிக்கணக்கில் நூதன மோசடி!

அவ்வாறு செலுத்தி திட்டத்தில் சேர்ந்தால், ஒவ்வொரு திட்டத்தில் உள்ள வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்யும்போது, 8 முதல் 18 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். குறிப்பாக கிங் என்ற திட்டத்தில் சேர்ந்தால், ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்யலாம். ஒவ்வொரு லைக்கிற்க்கும் 18 ரூபாய் சம்பாதிக்கலாம். அதன்படி ஒரு நாளைக்கு 1,800 ரூபாயும், மாதம் 54 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் செயலியில் பட்டியலிட்டுள்ளனர்.

இதனை நம்பி பலரும் செயலியில் உள்ள பல திட்டங்களில் பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், சம்பாதிக்க ஆரம்பித்த இரண்டு மூன்று நாட்களில் செயலி செயலிழந்து விடுவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குறைந்த பட்சம் 200 ரூபாய் சம்பாதித்தால் தான், செயலியின் வாலட்டில் சேரும் பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியும். ஆனால் அதற்குள்ளாக செயலியை செயலிழக்க செய்து விடுகின்றனர். செயலிழக்க செய்தவுடன் அதே மோசடி, லைக் ஷேர் என்ற வேறு பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியை கண்டு பிடித்த இளைஞர்கள் சிலர், சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த செயலி மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலர் ஏமாந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் ஏமாந்தவர்கள் செலுத்திய பணமானது, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் வங்கிக் கணக்கிற்கு சென்றதையும் அந்த இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பணத்தை இழந்தால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்

கரோனா காலத்தில் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந்து இணையதளம் மூலம் பணி தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது. இவ்வாறு மோசடிகாரர்களிடம் பணத்தை இழந்தால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும், ஏனெனில் நாம் வழங்கிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து அவர்கள் வேறொரு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.

லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் தொடர்பான புகார்கள் மீது, சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டால் பணமிழந்து தற்கொலைகள் அதிகாமானதால் அதனை தடை செய்த அரசு, இது போன்ற செயலிகளையும் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது மாடல் அழகி பாலியல் புகார்

ABOUT THE AUTHOR

...view details