தமிழ்நாடு

tamil nadu

ரஷ்யா-உக்ரைன் போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது - ஜோ பைடன்

By

Published : Jan 6, 2023, 7:49 AM IST

உக்ரேனியர்களுக்கு பிராட்லி காலாட்படை தாக்குதல் வாகனங்களை அமெரிக்கா வழங்கவுள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

வாஷிங்டன்:அமெரிக்காவும் ஜெர்மனியும் உக்ரைனுக்கு காலாட்படை தாக்குதல் வாகனங்களை வழங்கவுள்ள நிலையில், போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், உக்ரேனியர்களுக்கு கூடுதல் உதவியையும் வழங்குவோம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே 11 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்துவருகிறது. பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருகிறது. அதில், அமெரிக்கா முக்கிய பங்குவகிக்கிறது. அமெரிக்காவின் ஆதரவால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவை அளித்துவருகின்றன.

குறிப்பாக ஜெர்மனி தங்களது மார்டர் காலாட்படை தாக்குதல் வாகனங்களை உக்ரேனியர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்தது. அதேபோல அமெரிக்காவும் தங்களது பிராட்லி காலாட்படை தாக்குதல் வாகனங்களை உக்ரேனியர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 5) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், ரஷ்யா-உக்ரைன் போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்க உக்ரேனியர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

போர் தொடங்கி பல மாதங்களாகியும் அவர்களது போர் வீரியம் சிறிதும் குறையவில்லை. ஜப்பான் மற்றும் பல ஜரோப்பிய நாடுகள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன. இன்னும் கூடுதலாக ஆதரவு அளிக்கப்போகிறோம். பல்வேறு நாடுகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட உள்ளோம். வான்வழி தாக்குதல்களுக்கும் உதவிகளை வழங்க உள்ளோம். இதை ரஷ்யர்கள் விரைவில் உணரத்தொடங்குவர். உக்ரைனுக்கு போர் உதவிகள் மட்டுமல்லாமல் உணவு, பொருளாதாரம் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். உக்ரனைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை தளவாடங்களை வழங்குவதில் எங்களுடன் ஜெர்மனியும் கைகோர்த்துள்ளது எனத் தெரிவித்தார்

இந்த போர் விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்கவில்லை. உக்ரைன் போரை ராஜதந்திரம் மூலம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்திவருகிறார். கடந்த நூற்றாண்டில் இரண்டாவது உலகப் போர், சர்வதேச அளவில் சீரழிவை ஏற்படுத்தியது. போருக்குப் பிறகு, அப்போதைய தலைவர்கள் அமைதியை ஏற்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டனர். இப்போது நாமும் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகளை எடுக்க வேண்டும். உலகெங்கும் அமைதி, இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, நிலையான மற்றும் கூட்டு உறுதிப்பாடுகள், காலத்தின் தேவை என்று உலக நாடுகளுக்கு ஜி20 கூட்டத்தில் மோடி அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய அமெரிக்க இடையிலான உறவால் நூற்றாண்டையே வரையறுக்க முடியும் - ரோ கன்னா

ABOUT THE AUTHOR

...view details